ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரியில் மண் எடுக்க ரூ25 லட்சம் கேட்டு குவாரி ஊழியர்களுக்கு சரமாரி அடி: சென்னை ரவுடியின் அடியாட்கள் அட்டகாசம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரி, அதே பகுதியில் உள்ள சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆழப்படுத்தி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, மாவட்ட பொறியாளர் சண்முகம் பெயரில் உத்தரவிடப்பட்டது. அதில், 60 நாட்களில் இந்த ஏரியை சீரமைத்து மண் அள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஏரியில் இருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளும் பணி தொடங்கியது. அப்போது, அங்கு வந்த சிலர், குவாரியில் மணல் எடுக்க வேண்டுமானால், தங்களுக்கு ரூ25 லட்சம் தரவேண்டும் என கேட்டுள்ளனர். இதனால், ஏரியை சீரமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்த அதிகாரிகள், அவ்வளவு பணம் தரமுடியாது என கூறினர். தொடர்ந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில், ரூ10 லட்சம் தருவதாக ஒப்பு கொண்டனர். ஆனால், தங்களுக்கு ₹25 லட்சம் மொத்தமாக தர வேண்டும்.

இல்லாவிட்டால், ஒரு லோடு லாரிக்கு ₹500 தர வேண்டும் என கேட்டுள்ளனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று காலை ஊழியர்கள், ஏரியில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்போது, 10க்கு மேற்பட்ட கார்கள், அங்கு வந்தன. அதில், இருந்து இறங்கிய 50்க்கு மேற்பட்டோர் உருட்டுக்கட்டை, இரும்புராடு உள்பட ஆயுதங்களை வைத்திருந்தனர். அவர்களை கண்டதும், அங்கிருந்த பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் தலை தெறிக்க ஓடிவிட்டனர்.

இதையடுத்து அவர்கள், அங்கிருந்த 2 பொக்லைன் ஆபரேட்டர்கள், பில் போடும் பணியில் ஈடுபட்ட பாண்டி, கணபதி உள்பட ஊழியர்கள் பலரை சரமாரியாக தாக்கினர். பின்னர், தங்களுக்கு பணம் தராமல், வேலை செய்ய கூடாது. நாளை (இன்று) வருவோம். பணத்தை எடுத்து வைக்க வேண்டும் என கூறி எச்சரித்து சென்றனர். தகவலறிந்து பெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு படுகாயமடைந்தவர்களை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி நகேந்திரனின் தம்பி மற்றும் அடியாட்கள், குவாரி ஒப்பந்ததாரரை மிரட்டி பணம் கேட்டனர் என தெரியவந்ததாக போலீசார் கூறினர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் கூறுகையில், அரசியல் கட்சியை சேர்ந்த சிலர், எங்களிடம் ₹25 லட்சம் கேட்டனர். நாங்கள் பணம் தர மறுத்துவிட்டோம்.

ஆனாலும், எங்களிடம் பணம் வாங்குவதற்காக, சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியின் தம்பி மற்றும் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். குறிப்பாக, சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி, புழல் சிறையில் இருக்கிறார். அவரது பெயரை பயன்படுத்தி, சிலர் அட்டகாசம் செய்கின்றனர் என்றனர்.

Related Stories: