வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சி மன்ற தலைவர், 22 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடக்க உள்ளது. இதில் 2 மாவட்ட கவுன்சிலருக்கு 28, 22 ஒன்றிய கவுன்சிலருக்கு 146, 50 ஊராட்சி மன்ற தலைவருக்கு 269, 381 ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 1402 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏராளமானோர் நேற்று தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதைதொடர்ந்து, திருப்போரூர் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 24, 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 112, 49 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 201 பேர் தற்போது களத்தில் உள்ளனர். அவர்களுக்கான சின்னங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அப்போது, வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார், செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார் ஆகியோர் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சுவிடம் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இதற்கிடையில், திருப்போரூர் ஒன்றியம் பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பா.தனசேகரன் (51) என்பவர் மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி பவானி தாக்கல் செய்தார். நேற்று தனசேகரனின் மனைவி பவானி தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து வேறு யாரும் போட்டியிடாததால், பா.தனசேகரன் பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி கடந்த 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1986, 1996, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கவில்லை. கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக ஒருவரை தேர்வு செய்து, அவரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தனர். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்வதில்லை. 2001ம் ஆண்டு மட்டும் மாற்று வேட்பாளராக மனு செய்த ஒருவர், தனது மனுவை வாபஸ் வாங்க கால தாமதமாக சென்றதால் தேர்தல் நடந்தது. அப்போதும் கிராம மக்கள் முன்னிறுத்திய வேட்பாளரே வெற்றி பெற்றார். இந்தாண்டு அதேபோல் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தனசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. இதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. இந்தவேளையில், வாலாஜாபாத் ஒன்றியம் மருதம் ஊராட்சி மன்ற தலைவராக ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், 61 ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்கள் 42 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன.

அதில், குன்னவாக்கம் ஊராட்சியில் 4 பேர் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று மாலை 3 பேர், தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து திமுக இளைஞரணி சத்யா (எ) சத்யராஜ், போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பெரிய காட்டுப்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் உள்பட ஊராட்சியில் உள்ள 6 வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories:

>