அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 2 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

மதுராந்தகம்:  மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில், போட்டியின்றி 2 பேர், ஊராட்சி தலைவர்களாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அதிமுக, பாமக உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், 150 பேர் திமுகவில் இணைந்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல் வீரர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் ஓட்டலில், மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடந்தது.

இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலந்துகொண்டு  உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வடமணிபக்கம், தின்னலூர் ஆகிய ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த வடமணிபாக்கம் ஜெயந்தி வடிவேல், தின்னலூர் ரமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அந்த ஊராட்சிகளில் இருந்து வேறு யாரும் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால், மேற்கண்ட ஊராட்சிகளளில் 2 பேரையும் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  

இதையடுத்து,  அமைச்சர் சேகர்பாபுவிடம் வடமணிபக்கம் ஜெயந்தி வடிவேல், தின்னலூர் ரமணி ஆகியோர் வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து, செய்யூர் தொகுதியில் உள்ள லத்தூர் மற்றும் சித்தாமூர் ஆகிய ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல்வீரர்கள் கூட்டம், கீழ் மருவத்தூரில் நடந்தது. அதில், அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, லத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள நீலமங்களத்தில் இருந்து அதிமுக, பாமக உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து 150 பேர் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் எம்பி கலாநிதி வீராசாமி, செல்வம், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, சேகர், பரந்தாமன், எபினேசர், மூர்த்தி, ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு லத்தூர் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு சித்தாமூர் ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, சிற்றரசு, மதுராந்தகம் ஒன்றிய செயலாளர்கள் சத்யசாய், ஸ்ரீதர், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர்கள்  கண்ணன், தம்பு, மாவட்ட பொருளாளர் கோகுலக்கண்ணன், மதுராந்தகம் நகர செயலாளர் குமார்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: