திருப்பதியில் இலவச தரிசனம்; 2.80 லட்சம் டிக்கெட்டுகள் 30 நிமிடங்களில் முன்பதிவு: அடுத்த மாத ஒதுக்கீடும் காலி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை 30 நிமிடத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா ைவரஸ் பரவல் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு 8 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதனை பெற பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, இலவச தரிசன டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. இதன்படி, ஒரு நாளைக்கு 8 ஆயிரம் டிக்கெட்டுகள் என, செப்டம்பர் மாதத்துக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் 30ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கான 40 ஆயிரம் டிக்கெட்டுகளும், அக்டோபர் மாதத்திற்கான 2.4 லட்சம் டிக்கெட்டுகளும் என மொத்தமாக 2.80 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது. தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

இதனை பெற ஒரே நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தாலும், சர்வர்கள் முடங்குவதை தடுப்பதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளை பிரபல கம்ப்யூட்டர் நிறுவனங்களுடன் இணைந்து தேவஸ்தானம் செய்திருந்தது. இதனால், 2.80 லட்சம் இலவச தரிசன  டிக்கெட்டுகளையும் 30 நிமிடங்களிலேயே பக்தர்கள் முன்பதிவு செய்து முடித்தனர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  

Related Stories:

>