கூட்டு சதி செய்து பீரில் கொள்ளை லாபம்; மது தொழிற்சாலைகளுக்கு ரூ873 கோடி அபராதம்: போட்டி ஆணையம் அதிரடி

புதுடெல்லி: கூட்டுச்சதி செய்து பீர்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்த 2 மதுபான தொழிற்சாலைகளுக்கு ரூ.873 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான தொழில் போட்டி ஏற்படுவதை உறுதி செய்யவும், மோசடிகள் மூலம் போட்டி நிறுவனங்களை முடக்குவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், ‘இந்திய  போட்டி ஆணையம்’ செயல்படுகிறது. நாடு முழுவதும்  பல்வேறு மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் முறைகேடாக கூட்டு சேர்ந்து, அதிக விலையை நிர்ணயித்து பீர்களை விற்று கொள்ளை லாபம் பார்ப்பதாக இதற்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, பீர் தயாரிக்கும் மதுபான தொழிற்சாலைகளில் கடந்த 2017ல் அதிரடி சோதனை நடத்தியது. இதில், 13 மதுபான தொழிற்சாலை நிறுவனங்கள், கடந்த 2009 முதல்  அரசின் விதிமுறைகளை மீறி, கூட்டுச் சதி செய்து பீரின் விலையை அதிகமாக நிர்ணயம் செய்து விற்று வந்தது  உறுதியானது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த முறைகேடு பற்றி விசாரித்து வந்த ஆணையம், 231 பக்க உத்தரவை நேற்று முன்தினம் பிறப்பித்தது. இதில்,  யுனைடெட் பிருவரீஸ், கார்ல்ஸ் பெர்க் இந்தியா  உள்ளிட்ட 11 மதுபான  நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக,  யுனைடெட் பிரூவரீசுக்கு ரூ.752 கோடியும், கார்ல்ஸ் பெர்க்குக்கு ரூ.121 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  

சங்கமும் உடந்தை

* புதுச்சேரி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த மோசடி  நடந்துள்ளது

* இந்த மோசடிக்கு முக்கிய காரண கர்த்தவாக, ‘அனைத்து இந்திய பீர் தயாரிப்பு நிறுவனங்கள் சங்கம்,’ இருந்துள்ளது. அதற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: