ஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடி உரை; இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வாருங்கள்: உலக நாடுகளுக்கு அழைப்பு; அமெரிக்க பயணம் முடிந்து நாடு திரும்பினார்

நியூயார்க்: ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். 4 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட அவர் நேற்றிரவு டெல்லிக்கு புறப்பட்டார். ஐநா மற்றும் குவாட் மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 22ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இப்பயணத்தில் முதல்  முறையாக பிரதமர்  மோடி, அமெரிக்க அதிபர்  ஜோ  பைடனையும், துணை அதிபர்  கமலா  ஹாரிசையும் வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதை தொடர்ந்து, குவாட் மாநாட்டில் பங்கேற்றார்.

பயணத்தின் கடைசி நாளான நேற்று நியூயார்க் வந்தடைந்த பிரதமர் மோடி, ஐநா பொதுச்சபையின் 76வது அமர்வில் உரையாற்றினார். அப்போது, தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக மோடி மறைமுகமாக தாக்கிப் பேசினார்.  இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிகக்கொடிய தொற்று நோயை, கடந்த ஒன்றரை ஆண்டில் இந்த உலகம் சந்தித்துள்ளது. இந்த பயங்கர தொற்று நோயால் பலியான அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோக தளமான கோவின் மூலமாக, டிஜிட்டல் உதவியுடன் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறோம். உலகிலேயே முதல் முறையாக டிஎன்ஏ தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்த முடியும். இதே போல, மூக்கு வழி தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. எம்ஆர்என்ஏ தடுப்பூசியும் இறுதிகட்டத்தில் உள்ளது. கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்ததால் இந்தியாவில் நிறுத்தப்பட்ட தடுப்பூசி ஏற்றுமதி, மீண்டும் தொடங்க உள்ளது.

எனவே உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வரவேண்டுமென அழைப்பு விடுக்கிறேன். இன்று அதிகரித்து வரும் பிற்போக்கு சிந்தனையும், தீவிரவாதத்தின் அச்சுறுத்தலை உலகம் சந்தித்து வருகிறது. இந்த சூழலில், பிற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள் தீவிரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாதம் பிறருக்கு எவ்வளவு அபாயத்தை தருமோ, அதே அளவு ஆபத்தை அதை ஆதரிப்பவர்களுக்கும் திருப்பி தரும்.

எனவே, ஆப்கானிஸ்தானின் இக்கட்டான சூழலை எந்த ஒரு நாடும் தனது சுயநலத்திற்கான பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினருக்கு வேண்டிய உதவிகளை செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இதைத் தொடர்ந்து 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்றிரவு நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

சிறுவயதில் டீ விற்ற நான் ஐநாவில் உரையாற்றுகிறேன்

பிரதம் மோடி தனது உரையில் இந்திய ஜனநாயகத்தை மிகவும் உயர்வாக பேசினார். அவர், ‘‘ஜனநாயகத்தின் தாய் என்ற போற்றப்படும் நாட்டின் பிரதிநிதிநான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஜனநாயகத்தின் சிறந்த பாரம்பரியத்தை நாங்கள் கொண்டுள்ளோம். பன்முகத்தன்மையே இந்தியாவின் வலுவான ஜனநாயகத்தின் அடையாளம். ஒரு காலத்தில் தனது தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்து வந்த சிறுவன், இன்று இந்திய பிரதமராக 4வது முறையாக ஐநாவில் உரையாற்றுகிறான். இதுதான் இந்தியாவின் ஜனநாயக வலிமை’’ என தனது வாழ்க்கையை உதாரணமாக காட்டி பேசினார்.

இந்திய வளர்ச்சி; உலகின் வளர்ச்சி

பிரதமர் மோடி பேசுகையில், ‘‘உலகில் ஒவ்வொரு 6 நபரிலும் ஒரு இந்தியர் இருக்கிறார். எனவே, இந்தியாவின் முன்னேற்றம் உலகளாவிய வளர்ச்சியை துரிதப்படுத்தும். இந்தியா வளரும் போது உலகமும் வளரும். இந்தியா சீர்த்திருத்தம் செய்யும்போது, உலகமும் மாறும்,’’ என்றார்.

Related Stories: