நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: டெல்லி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை அதிரிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ரோகிணி மாவட்ட நீதிமன்ற விசாரணை அறைக்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல் திடீரென நேற்று முன்தினம் பிற்பகல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், திகார் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி கொல்லப்பட்டான்.

துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரையும் போலீசார் சுட்டு கொன்றனர். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார்.  அதில், ‘டெல்லி சம்பவத்தை தொடர்ந்து, நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் அனைத்திலும் தற்போது இருப்பதை விட கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல் உடையுடன் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகள் யார்?

அவர்களை அனுப்பியவர்கள் யார் என்பதை விரைவாக விசாரித்து, அந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். டெல்லியில் நடந்துள்ள இந்த சம்பவம், ஒட்டு மொத்த நீதிமன்ற பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. கடுமையான குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை நீதிமன்றங்களுக்கு நேரில் அழைத்து வருவதை தவிர்த்து, காணொலி மூலம் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்,’ என கூறியுள்ளார். இது, ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரோகிணி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு டெல்லியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கர்கர்டூமா, தீஸ் ஹசாரி, சாகேத், ரோஸ் அவனீவ் உள்ளிட்ட முக்கிய மாவட்ட நீதிமன்றங்களில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்துக்கு வரும் அனைவரும் மூன்றடுக்கு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories:

>