தேவகோட்டையில் ஆலோசனை கூட்டம் ; காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷ்டி மோதல்: நாற்காலி வீச்சு 2 பேருக்கு மண்டை உடைந்தது

தேவகோட்டை: சிவகங்கை  மாவட்டம், தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்பி கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது முன்னாள் எம்எல்ஏவும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி, அவரது மகனும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கரு.மாணிக்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருந்தனர். நேற்றைய கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ ஆதரவாளர்கள் பணியாற்றியதாக, மாங்குடி எம்எல்ஏ ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால், வாக்குவாதம் வெடித்தது. அப்போது மாங்குடி எம்எல்ஏ ஆதரவாளரான தேவகோட்டை நகர தலைவர் சஞ்சய்யை நோக்கி, கே.ஆர்.ராமசாமி ஆதரவாளரான செல்வகுமார் செருப்பை வீசினார். சிலர் சஞ்சயின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினர். அப்போது எம்எல்ஏ கரு.மாணிக்கம், மாங்குடி எம்எல்ஏவின் உதவியாளர் மணியை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து 2 தரப்பினரும் மாறி, மாறி மோதிக்கொண்டனர்.

பின்னர் பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசினர். இதில் முன்னாள் எம்எல்ஏ ஆதரவாளரான பாலமுருகன் (33), மாங்குடி எம்எல்ஏ ஆதரவாளரான வினோத்குமார்(30) ஆகியோர்  மண்டை உடைந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். நிலைமை மோசமடையவே போலீசார்  கட்சி அலுவலகத்தில்  புகுந்து  அனைவரையும்  வெளியேற்றினர்.

Related Stories:

>