உதவி தேர்தல் அலுவலரை தாக்கிய அதிமுக நிர்வாகி: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் 11 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் வாணியந்தல் ஆறுமுகம் மனைவி அலமேலு, அதிமுக சார்பில் அந்தோணிசாமி மனைவி சலேத்மேரி உள்பட 12 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு முன்மொழிந்த பழனி மகன் வேலு என்பவர் அதிமுக வேட்பாளர் மனுவை திரும்ப பெறுவதாக கூறி உதவி தேர்தல் அலுவலர் சாமிதுரையிடம் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து திமுக வேட்பாளர் ஆறுமுகம் மனைவி அலமேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மாதேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை அறிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிமுக வேட்பாளருடன் கள்ளக்குறிச்சி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவரும் கள்ளக்குறிச்சி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வேட்பாளர் சலேத்மேரி வாபஸ் பெற மனு அளிக்கவில்லை என கூறி உதவி தேர்தல் அலுவலர் சாமிதுரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது உதவி தேர்தல் அலுவலர் திட்டமிட்டு அதிமுக மனுவை வாபஸ்பெற செய்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர் திடீரென உதவி தேர்தல் அலுவலர் சாமிதுரையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி (பொ) பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் அதிமுக நிர்வாகிகளை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் உள்பட அதிமுக நிர்வாகிகள் ஆபாசமாக திட்டி தாக்கியதாக கள்ளக்குறிச்சி டிஎஸ்பியிடம் உதவி தேர்தல் அலுவலர் சாமிதுரை புகார் மனு அளித்துள்ளார்.

Related Stories: