திருப்பத்தூரில் கோயிலுக்கு போகலாம் என அழைத்துச் சென்று தூக்க மாத்திரை கொடுத்து மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்: குழந்தையுடன் தற்கொலை செய்வதாக ஆடியோ

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கோயிலுக்கு போகலாம் என அழைத்துச் சென்று மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்த பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன், குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வதாக ஆடியோ வெளியிட்டுள்ளார். படுகாயம் அடைந்த மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (28), டிரைவிங் ஸ்கூல் வைத்துள்ளார். இவரிடம் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு டிரைவிங் பயிற்சி பெற வந்த, கந்திலி அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த திவ்யா(24)வுடன் காதல் மலர்ந்தது.

உடனடியாக திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 3 வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்ததும் சமாதானம் அடைந்த பெற்றோர் திவ்யாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை தாய் கவனித்ததால் அங்கேயே தங்கி திவ்யா பி.எட் படித்து முடித்துள்ளார். சத்தியமூர்த்தி அவ்வப்போது அங்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் சத்தியமூர்த்தி கோயிலுக்கு போகலாம் என்று கூறி திவ்யாவையும் குழந்தையையும் பைக்கில் அழைத்துக்கொண்டு தனது டிரைவிங் ஸ்கூலுக்கு சென்றார்.

அங்கு திவ்யாவுக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். அவர் எதற்காக மாத்திரை என்று கேட்டதற்கு  ‘‘கை, கால் வலிக்கிறது என்று சொன்னாயே அதற்காக வாங்கி வந்தேன்’’ என்று கூறியுள்ளார். இதை நம்பிய திவ்யா மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கினார். பின்னர், அவரை அருகிலுள்ள வயல்வெளிக்கு தூக்கிச் சென்று, உடலில் பெட்

ேரால் ஊற்றி தீவைத்துள்ளார். திவ்யா வலி தாங்காமல் அலறவே குழந்தையை தூக்கிக் கொண்டு சத்தியமூர்த்தி தப்பி ஓடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் திவ்யாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிந்து சத்தியமூர்த்தியை  தேடி வருகின்றனர். இந்நிலையில் மனைவியை எரித்துவிட்டு, குழந்தையுடன் தப்பிய சத்தியமூர்த்தி உறவினர்களின் வாட்ஸ் அப்பிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘எனக்கு 2 கிட்னியும் பாதிப்படைந்துவிட்டது.

இதனால் நான் நீண்ட காலம் வாழ முடியாது. எனவே மனைவியை கொன்றுவிட்டு, நான் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். அவரது செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தபோது வேலூரில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து வேலூர் லாட்ஜ்களில் குழந்தையுடன் யாராவது வந்து தங்கினார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>