குடியாத்தத்தில் அதிரடி சோதனை; ரூ1 கோடி கள்ளநோட்டுகள் தயாரிக்கும் பொருட்கள் சிக்கியது: மின்வாரிய அதிகாரி உட்பட 6 பேர் கைது

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்தவர் சரவணன்(44). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். குடியாத்தம் அடுத்த ஜீவாநகர் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் தயாரிப்பதாக வேலூர் மாவட்ட, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சரவணன் வீட்டில் நேற்று காலை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு ரூ1 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் தயாரிப்பதற்காக  வைத்திருந்த ரசாயன பொருட்கள், ரூ2 ஆயிரம் மற்றும் ரூ500 கள்ள நோட்டுகள் பிரின்ட் செய்வதற்கு வைத்திருந்த காகிதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் கள்ளநோட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலு(42), அசோக்குமார்(31),  தாமு(20), கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கம்(41), அணைக்கட்டு ரமேஷ்(32) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: ரூ2000, ரூ500 நோட்டுகள் அளவிலான கருப்பு நிற தாள்களை கெமிக்கல் மூலம் கழுவினால், கள்ள நோட்டுகள் அச்சிடுவதற்கான காகிதங்கள் கிடைக்கும். அதில் கள்ளநோட்டுகளை அச்சிட்டால் ஒரிஜினல் மாதிரி இருக்கும் என்று காட்பாடி கே.வி.குப்பம் அடுத்த பரதராமியை சேர்ந்த குமார், குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியை சேர்ந்த மூர்த்தி ஆகியோர் கூறியுள்ளனர். இதையடுத்து மின்வாரிய அலுவலர் சரவணன் உட்பட 6 பேரும் சேர்ந்து கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில்விட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ரூ1 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை அச்சிடும் காகிதங்கள், கெமிக்கல் உள்ளிட்டவற்றை ₹2 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர். குமார், மூர்த்தி ஆகிய 2 பேரை தேடி வருகிறோம். அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் எங்கிருந்து கள்ளநோட்டு அச்சிடும் காகிதங்கள் சப்ளை செய்யப்படுகிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். அதேபோல் வேறு யாருக்காவது கள்ளநோட்டுகள் தயாரிக்கும் காகிதங்களை விற்பனை செய்துள்ளார்களா? என்பதும் தெரியவரும் என்றனர்.

Related Stories:

>