உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை அதிமுக பிடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: தமிழகத்தில் 2 கட்டமாக நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட  9 மாவட்டங்களில், வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில்  உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து மறைமலைநகரில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில்,  அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, கட்சியினரிடம் பேசியதாவது:‘‘அதிமுக 2011 முதல் 2021வரை  10 ஆண்டுகளாக திறமையான ஆட்சி செய்து, தமிழகத்தில்  கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, என அதிகமான கல்லூரிகளை துவக்கியது.  ஏற்கனவே, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தியதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள்  மருத்துவத்தில் சேர்ந்துள்ளனர்.  அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப்  மற்றும் மிதிவண்டி வழங்கியது, மேலும், பல்வேறு திட்டங்கள் உள்பட அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசுதான் நிறைவேற்றியது.

காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டை பிரித்து தனி மாவட்டமாக அதிமுக அறிவித்தது.  எனவே, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும். கிராமங்கள்தோறும் அதிமுக அரசின் சாதனைகளை  வைத்து வாக்கு சேகரியுங்கள். திமுக ஆட்சிக்கு வந்து எந்த வாக்குறுதியும் நிறை வேற்றவில்லலை.  நேரடியாக தேர்தலை  சந்தித்து வெற்றிபெறமுடியாமல்  திமுக அரசு அதிமுக  வேட்பாளர்களின் மனுவை நிராகரித்து வருகிறது.’’ என்று பேசினார்.

Related Stories: