குடிமை பணி தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு; தமிழகத்தில் இருந்து தேர்வாவோர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து தேர்வாவோர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான குடிமைப்பணி தேர்வை (சிவில் சர்வீஸ்) நடத்துகிறது. 2020ம் ஆண்டில் 761 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான இறுதி தேர்வு முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியானது. தமிழகத்தில் மட்டும் சுமார் 36 பேர் தேர்ச்சி பெற்றனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவன் நாராயண சர்மா அகில இந்திய அளவில் 33வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். சண்முகவள்ளி என்ற மாணவி, மாணவிகள் அளவில் தமிழகத்தில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 108வது ரேங்க்கும் எடுத்துள்ளார். கோவையை சேர்ந்த மாணவன் பிரசன்ன குமார் அகில இந்திய அளவில் 100வது இடத்தை பிடித்தார். அது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளி மாணவன் ரஞ்சித் 750வது இடத்தை பிடித்துள்ளார்.

இவர் முழுக்க முழுக்க தமிழில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தேர்ச்சி பெற்றவர்கள் ரேங்க், இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு என்ன பதவி என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் இந்திய குடிமைப் பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய குடிமைப் பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள்; சிறப்பாகப்  பணியாற்றிட வாழ்த்துகள்.

கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் தேர்வு பெற்றதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. தேர்ச்சி பெறாதோர் துவள வேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள். வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் நமது அரசு வழங்கும் என்ற உறுதியை இத்தருணத்தில் அளிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: