காசநோய் உள்ளவர்களை கண்டறிய வழிகாட்டு குழு: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காசநோய் பாதித்த நபர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதனின் ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில், துணை ஆணையர் மனிஷ், மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா, திட்ட அலுவலர் டாக்டர் லாவண்யா,  காசநோய் அலுவலர் டாக்டர் சங்கீதா,  தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் பத்ம பிரியா, தொண்டு நிறுவன பிரநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தற்போது, மாநகராட்சியின் 140 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காசநோய் கண்டறியும் மையம் இயங்கி வருகிறது.  மேலும், ஊடுகதிர் பொருத்தப்பட்ட 7 நடமாடும்  வாகனங்களும் செயல்பாட்டில் உள்ளன. சென்னையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட காசநோய் இல்லா சென்னை என்ற திட்டத்தில் பெறப்பட்ட அனுபவங்களை கொண்டு நோய் கண்டறியும் முறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும்,  சிகிச்சைக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும்,  விழிப்புணர்வு பிரசாரங்களை தீவிரமாக முன்னெடுக்கவும் வழிகாட்டு குழு அமைக்க  அறிவுறுத்தப்பட்டது.   இக்குழுவில் உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி, சென்னை மாநகராட்சி ஆணையர், மருத்துவ அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினர் உட்பட நிபுணர்கள் உறுப்பினர்களாக நியமித்து 2 மாதத்திற்கு ஒருமுறை கூடி விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லட்சம் நபர்களில் 249 நபர்களுக்கு காசநோய் பாதிப்பு இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. காசநோயினை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் முற்றிலும் பாதுகாப்பாக குணமடையலாம்.  எனவே, காசநோய் அறிகுறிகளான தொடர்ந்து 2 வாரம் இருமல், காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் மற்றும் அவ்வப்போது சளியில் ரத்தம் கலந்து வருதல்   போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் அருகாமையிலுள்ள மாநகராட்சியின் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

Related Stories:

>