×

'பார்வையாளர்களுக்கு 37 வசதிகள் உள்ளன'... கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் குறித்து அமைச்சர் மெய்யநாதன் தகவல்!!

சென்னை : கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து அமைச்சர் திரு. சிவ மெய்யநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் திரு. சிவ மெய்யநாதன் அவர்களின் செய்தி குறிப்பு

தமிழ்நாட்டின் கடலோரப்பகுதி சுமார் 1076 கிமீ நீளம் கொண்டது.இதில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு இந்தியாவின் 9 வது நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் 21.9.2021 அன்று வழங்கப்பட்டது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பானது, உலகளவில் பாதுகாப்பு, துய்மையான கடற்கரைகளைத் தேர்ந்தெடுத்து, நீலக்கொடி கடற்கரை (ப்ளு பிளாக் பீச்) என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில், சுற்றுச்சூழல் துறையானது, இப்பணியினை செயல்படுத்தும் துறையாக அமைந்துள்ளது. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் வகையில் கடற்கரையில் பசுங்கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பார்வையாளர்களுக்கு 37 வசதிகள் உள்ளன, இதில் பாதுகாப்பான நீச்சல் மண்டலம், உடைமாற்று பகுதி, சாய்ந்திருக்கும் மூங்கில் நாற்காலிகள், நிழற்குடைகள், வெளிப்புற உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைத்தொட்டிகள், கழிப்பறை மற்றும் 7 நிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மணல் சுத்தம் செய்யும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்கரை மணல் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகிறது.

கடற்கரையின் முக்கிய ஈர்ப்பு, நீராடும் மண்டலத்தில் பாதுகாப்பாக நீந்தக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஆம்பிபியஸ் வீல் நாற்காலி ஆகும். கடற்கரையில் குளிப்பதற்கான காலம் ஜனவரி 15 முதல் செப்டம்பர் 15 வரை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை மற்றும் நீரோட்டநிலையைப் பொறுத்து இக்காலம் அறிவிக்கப்படும்.

பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக 4 கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த அவசர அழைப்பிற்கும் உயிர்காக்கும் காவலர்கள் கண்காணிப்பு கோபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், முதலுதவி மையம் CPR உட்பட உடனடி மருத்துவ கவனிப்பை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. 60 எல்இடி ஒளிரும் தெரு விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டுள்ள கடற்கரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

குளியல் மண்டல பகுதியில்Intestinal Enterococci அளவு  56 cfu/100ml (ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை 100) மற்றும் E coli அளவு 62 cfu/100ml (ஏற்கத்தக்க நிலை 250)ஆக மிக உயர்ந்த தரங்களைக் கொண்டு பராமரிக்கப்படுகிறது.

மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் திரு. சிவ மெய்யநாதன்  அவர்கள், இந்த கடற்கரை, ஒரு பூஜ்ஜிய திரவ கழிவு மேலாண்மை கடற்கரை, இதில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், 40 கிலோவாட் ஆஃப்-கிரிட் சூரிய மின் நிலையம் மற்றும் நாள் ஒன்றுக்கு 50 கிலோ செயலாக்க திறன் கொண்ட தானியங்கி உரம் தயாரிக்கும் இயந்திரம் கொண்ட திடக்கழிவு மேலாண்மை அலகு உள்ளது என்று குறிப்பிட்டார்.



Tags : Minister ,Maiyanathan ,Koalum , அமைச்சர் திரு. சிவ மெய்யநாதன்
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...