×

சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு : 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு ;ரூ .9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்

சென்னை:சென்னையில் இரண்டு நிதி நிறுவனங்கள் அதிக அளவு வட்டிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.300 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.9 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வரி செலுத்தாத பல நிறுவனங்கள் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க வருமானவரித்துறை அதிகாரிகள் ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களை கண்காணித்தும் வருகின்றனர். அவ்வாறு கண்காணித்ததில் வடசென்னையில் உள்ள 2 நிதி நிறுவனங்கள் அதிக அளவில் வட்டி வாங்கி வந்ததும், அதை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை சவுகார்பேட்டை ஸ்டார்ட்ன் முத்தையா தெருவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.   சவுகார்பேட்டையில் உள்ள தொழிலதிபரின் வீடு, குடோன், வேப்பேரியில் உள்ள அலுவலகம், அண்ணாநகரில் உள்ள அலுவலகம், தொழிற்சாலை என 15 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில், தொழிலதிபர் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள கணக்கு வழக்குகள், கணினிகள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

இந்தநிலையில், சென்னையில் உள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களில் கடந்த 23ம் தேதி மற்றும் 2வது நாளாக நேற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை  மேற்கொண்டனர். இந்த நிதி நிறுவனங்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருவதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதேபோல், அதிகப்படியான வட்டிக்கு பணம் கொடுத்து வட்டி வசூலித்து வந்ததும் தெரியவந்தது. இதற்கான வரியை முறையாக கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், கடன் பெற்றவர்களிடம் இருந்து வாங்கும் அதிக வட்டி தொகையை மறைமுகமாக வசூலித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிதி நிறுவனங்களைத் தொடர்ந்து, சென்னையில் கீழ்ப்பாக்கம், சவுகார்ப்பேட்டை உட்பட 35 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததும் கண்டறியப்பட்டது. மேலும் ரொக்கமாக ரூ.9 கோடி இருந்ததை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதலும் செய்துள்ளனர். இந்த பறிமுதலைத் தொடர்ந்து, நிதி நிறுவன நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Chennai , வருமான வரித்துறை
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...