×

பிரதமர் மோடி புகைப்படத்தை மின்னஞ்சலில் இருந்து நீக்குங்கள்:தேசிய தகவல் மையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ மின்னஞ்சல்களின் அடிக்குறிப்பில் இருந்த பிரதமர் மோடியின் புகைப்படமும், ஒன்றிய அரசின் முழக்கங்களையும் நீக்க தேசிய தகவல் மையத்திற்கு பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தகவல் மையம் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளின் அனைத்து ‘சாப்ட்வேர் புரோகிராமிங்’கும் வடிவமைக்கப்படுகின்றன. அதன்படி, நீதிமன்றங்களுக்கான சாப்ட்வேர்களும் தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய தகவல் மையமானது, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், பிரதமர் மோடியின் புகைப்படமும், ஒன்றிய அரசின் முழக்கமான ‘சப்கா சத் சப்கா விகாஸ்’ என்ற இந்தி வாசகத்தையும் தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களில் பதியவைத்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்திற்கும் தேசிய தகவல் மையம் வடிவமைத்த சாப்ட்வேர் பயன்படுத்துவதால், அதில் பிரதமர் மோடியின் புகைப்படமும், ஒன்றிய அரசின் முழக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளரின் கவனத்திற்கு புகார்கள் சென்றன. அதனையடுத்து, பிரதமர் மோடியின் படமும், ஒன்றிய அரசின் முழக்கங்களும், தேசிய தகவல் மையம் சார்பில் வெளியிடப்படும் மின்னஞ்சல் பகுதியில் இருந்து நீக்கப்பட்டன.

இதுகுறித்து உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் படத்திற்கும், ஒன்றிய அரசின் கொள்கை முழக்கத்திற்கும் உச்சநீதிமன்ற நீதித்துறையின் செயல்பாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை. இருந்தாலும், பிரதமரின் புகைப்படமும், அரசின் முழக்கங்களும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களில் அடிக்குறிப்பாக பதிவாகி வருகின்றன. அதனால், உச்சநீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் தேசிய தகவல் மையம், மின்னஞ்சல்களின் அடிக்குறிப்பில் தானாக பதிவாகி வரும் பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், ஒன்றிய அரசின் முழக்கங்களையும் நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், இனிமேல் மின்னஞ்சல்களில் உச்சநீதிமன்ற கட்டிடத்தின் முகப்பு படமானது அடிக்குறிப்பில் பயன்படுத்தப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Modi ,Supreme Court ,National Information Center , பிரதமர் மோடி
× RELATED தடுப்பூசி உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை