தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

சென்னை : யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். யுபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக இத்தேர்வுகள் நடைபெறும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில், அதன் முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. இதில், அகில இந்திய அளவில் 761 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் சுபம் குமார் முதலிடத்தையும், ஜக்ரதி அவஸ்தி 2வது இடத்தையும், அன்கிட்டா ஜெயின் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.  தமிழகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த நாராயண சர்மா அகில இந்திய அளவில் 33வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி உள்ளோருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள்; சிறப்பாகப் பணியாற்றிட வாழ்த்துகள்.

கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் தேர்வுபெற்றதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள்.வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்கு உண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் நமது அரசு வழங்கும் என்ற உறுதியை இத்தருணத்தில் அளிக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>