மண்வளம் மேம்பட பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்ய வேண்டும்-விவசாயிகளுக்கு ஆலோசனை

திருமயம் : அரிமளம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பசுந்தாள் உரப்பயிர்கள் உரிய பருவத்தில் மடக்கி உழவு செய்து பயன் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரத்தில் பரவலாக 5,200 எக்டர் சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பா நெல் சாகுபடிக்கு முன்னதாக பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்து 50 சதவீத அளவில் பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்தலாம்.

அரிமளம் வட்டாரத்தில் கீழப்பனையூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்கைப்பூண்டு, பசுந்தாள் உர சாகுபடி பயிர்கள், தற்பொழுது மடக்கி உழும் தருணத்தில், வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. அரிமளம் வட்டாரத்தில் சுமார் 1200 எக்டர் பரப்பளவில் பசுந்தாள் உரப்பயிர்களை விவசாயிகள் தற்பொழுது சாகுபடி செய்து வருகின்றனர். இதனிடையே அரிமளம் வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து தலைமையில் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு மதியழகன், வேளாண்மை அலுவலர் தரக்கட்டுப்பாடு முகமது ரபி, அரிமளம் வட்டார வேளாண்மை அலுவலர் வீரமணி ஆகியோர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

பசுந்தாள் சாகுபடி செய்ய 1 ஏக்கருக்கு 20 கிலோ அளவில் தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து 25 நாட்கள் அல்லது 50 சதவீத பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்தலாம் எனவும், தொடர்ந்து சாகுபடி மேற்கொள்ளும் நெல் பயிருக்கு ஆகும் தழைச்சத்து உரத்தை 25 சதவீதம் மிச்சப்படுத்தலாம் எனவும் விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

பசுந்தாள் உரப்பயிர்களானது மண்ணில் உள்ள தழைச்சத்தை கிரகித்து வேர் முடுச்சுகளில் சேகரித்து வைக்கிறது.

இவற்றை மடக்கி உழுவதன் மூலம் மண்ணில் உள்ள அங்கக சத்து அதிகரிக்கிறது. மண்ணில் நன்மை செய்யக் கூடிய நுண்ணுயிர் பெருக்கம் அடைகிறது. இதனால், மண்ணிற்கு எளிதாக கிடைக்கக் கூடிய சத்துக்களுடைய அளவு அதிகரிக்கிறது. மண்ணின் நீர் சேமிப்பு திறன் அதிகமாகிறது. காற்றோட்டமாகவும் இருப்பதால் தொடர்ந்து சாகுபடி செய்யக் கூடிய நெல் பயிர்கள் அதிக மகசூல் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே, அரிமளம் வட்டார விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பசுந்தாள் உரப்பயிர்களை உரிய பருவத்தில் மடக்கி உழவு செயது மண்வளத்தை மேம்படுத்தி சம்பா சாகுபடியில் அதிக மகசூல் பெற்று பயன் பெறுமாறு அரிமளம் வேளாண்மை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>