×

ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்-போக்குவரத்து பாதிப்பு

தா.பழூர் : ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே குறைவான நாட்களே பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் வழங்குவதில் தாமதம் இருந்ததாகவும். பின்னர் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் இவ்வூராட்சிக்கு பணிகள் வழங்கப்படாமல் இருந்து உள்ளது.


வேலை வழங்காததால் ஆத்திரமடைந்த ஸ்ரீபுரந்தான் ஊராட்சி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மன்ற தலைவர் உலகநாதன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீபுரந்தானில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் மற்றும் உடையார்பாளையம், தா.பழூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பணிகள் வழங்க உறுதி அளித்தால்தான் கலைந்து செல்வோம் என்றும் அதுவரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என கோஷங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் அரியலூர்- கும்பகோணம், ஜெயங்கொண்டம்- முத்துவாஞ்சேரி சாலையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் பேச்சு வார்த்தை நடத்தி திங்கள்கிழமை முதல் தொடர்ந்து வேலை வழங்கப்படும் என எழுத்து பூர்வமாக அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.



Tags : Sripuranthan panchayat , Dhaka: The public staged a road blockade in Sripuranthan panchayat condemning the non-provision of 100 days of work. Traffic was disrupted in connection with this.
× RELATED ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் 100 நாள் வேலை...