தேனி பைபாஸ் வனப்பகுதியில் சாலையோரம் குவிக்கப்படும் குப்பை-கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்குமா...

தேனி : தேனி பைபாஸ் சாலையோரம் குப்பை குவிக்கப்படுவதை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனியில் புதிய பஸ்நிலையம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்த பைபாஸ் சாலையின் இருபுறமும் வனத்துறை காப்புக்காடு அமைந்துள்ளது. இதனால், சாலையை அகலப்படுத்த வனத்துறை அனுமதிப்பதில்லை. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை விரிவாக்கத்துக்கு வனத்துறை அனுமதிப்பதில்லை புகார் தெரிவிக்கின்றனர். இதனால், பைபாஸ் சாலையில் விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக வனத்துறை நர்சரி அருகே, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையோரம், நகரைச் சேர்ந்த கட்டிடக்கழிவுகள், காய்கறி கழிவுகள், உணவுக்கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால், குப்பைகள் மலைபோல குவிந்து வருகின்றன. காய்கறி கழிவுகள், உணவுக்கழிவுகளை தின்பதற்காக தெருநாய்கள் அதிகமாக கூடுகின்றன.

பைபாஸ் சாலையில் கழிவுகள் கொட்டப்படும் காற்றில் பறந்து சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது விழுந்து, அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், இக்கழிவுகளை தின்பதற்காக வரும் நாய்களும், திடீரென சாலைகளின் குறுக்கே ஓடுவதால் டூவீலர் ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. சாலையை அகலப்படுத்த தடையாக இருக்கும் வனத்துறை நிர்வாகம், வனப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: