ஊட்டி-இடுஹட்டி சாலையில் அபாயகர மரங்களை அகற்ற கோரிக்கை

ஊட்டி :  ஊட்டி-இடுஹட்டி சாலையில் பல இடங்களில் சாலைகளின் குறுக்கே மரங்கள் சாய்ந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஊட்டியில் இருந்து இடுஹட்டி செல்லும் சாலையில் கோடப்பமந்து முதல் அட்டபெட்டு வரை சாலையின் இருபுறமும் உள்ள ராட்சத மரங்கள் மழைக்காலங்களில் சாலையில் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கிறது. அதுமட்டுமின்றி, கனரக வாகனங்கள் செல்லும் போது, இந்த மரங்களில் மோதி நின்று போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் என்பதால், இவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினரும் முன் வருவதில்லை. அதே சமயம், வனத்துறையினரும், இது போன்று சாய்ந்து சாலையில் தொங்கிக் கொண்டிருக்கும் மரங்களை அகற்றுவதில்லை. தற்போது, கோடப்பமந்து முதல் அட்டபெட்டு வரை ஏராளமான சீகை மற்றும் கற்பூர மரங்கள் சாலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. காற்றுடன் கூடிய மழை பெய்தால், இந்த மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், போக்குவரத்து பாதிப்பது மட்டுமின்றி, பயணிகளுக்கு விபத்து அபாயமும் உள்ளது. எனவே, இம்மரங்களை அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: