பீர் விலை நிர்ணய முறைகேடு வழக்கில் 2 பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 873 கோடி ரூபாய் அபராதம்

மும்பை : பீர் விலை நிர்ணய முறைகேடு வழக்கில் United Breweries, Carlsberg India ஆகிய பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் விதிமுறைகளை மீறி பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் சிண்டிகேட்அமைத்து பீர் மதுபானத்திற்கான விலையை நிர்ணயம் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிசிஐ எனப்படும் இந்திய வணிக போட்டி ஆணையம் பீர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது.

இதில் 13 நிறுவனங்கள் விதிகளை மீறி விலை ஒருங்கிணைப்பில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து நியாயமற்ற வணிக நடைமுறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய சிசிஐ 2017ம் ஆண்டு தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. 2009 முதல் 2018 வரை அரங்கேற்றிய முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்றது.

சுமார் 4 ஆண்டுகளாக விசாரித்த வந்த இந்திய வணிகப் போட்டி ஆணையம், United Breweries, Carlsberg India உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. சிசிஐ-யின் 231 பக்க உத்தரவில் United Breweries நிறுவனத்திற்கு ரூ. 752 கோடி அபராதமும் Carlsberg India நிறுவனத்திற்கு ரூ.121 கோடி அபராதமும் விதித்துள்ளது. ஏஐபிஐ எனப்படும் அனைத்து இந்திய பீர் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கத்தின் துணையுடன் இந்த முறைகேடுகள் அரங்கேறி இருப்பதால் அவ்வமைப்புக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர பீர் மதுபான விலை நிர்ணய முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் பல நிறுவனங்கள் அபராத நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கின்றனர்.இந்த நிறுவனங்கள் ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி மற்றும் புதுச்சேரியில் பீர் விலை நிர்ணய மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

Related Stories:

>