நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றி விவாதம் துருக்கியை தொடர்ந்து இங்கிலாந்து சில்மிஷம்: இந்தியா கடும் கண்டனம்

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரத்துக்கான அனைத்து கட்சி எம்பி.க்கள் குழு, `காஷ்மீரில் மனித உரிமைகள்’ என்ற தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதமே இதன் மீது நடக்க இருந்த விவாதம், கொரோனா பரவல் காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடந்தது. இதில், ஆளும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பி.க்கள் பேசினர். இதற்கு பதிலளித்த ஆசியாவுக்கான காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர் அமண்டா மில்லிங் பேசுகையில், ``காஷ்மீர் சூழலை இங்கிலாந்து தீவிரமாக கண்காணிக்கிறது. அங்குள்ள மக்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்த பிரச்னைக்கு இந்தியா-பாகிஸ்தான் தீர்வு காண வேண்டும்.

இங்கிலாந்து எந்த தீர்வும் வழங்கவோ அல்லது மத்தியஸ்தம் செய்யவோ முடியாது. இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை,’’ என்றார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, `காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது குறித்து எங்கு விவாதம் நடந்தாலும் அது உண்மையான, ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்,’ என்று தெரிவித்துள்ளது. இந்த விவாதத்தின் போது காஷ்மீர், மோடி ஆட்சியில் நடந்த 2002 குஜராத் கலவரம் குறித்து பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்பி நாஸ் ஷா பேசும் போது பயன்படுத்திய வார்த்தைகளுக்கும் இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பற்றி அவதூறாக பேசுவதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்,’ என்று கூறியுள்ளது. ஐநா பொதுச்சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய அந்நாட்டு அதிபர் எர்டோகன், காஷ்மீர் பிரச்னையை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>