×

நடனம்தான் என் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!

நன்றி குங்குமம் தோழி

பரதக் கலைஞர் நேஹா

மார்டர்ன் நடனங்கள் ஜாஸ், ராப், ராக்... என எவ்வளவு வந்தாலும், நம்முடைய பாரம்பரிய பரதத்துக்கு ஈடு இணை கிடையாது. நடனம் ஆடும் போது சலங்கையில் இருந்து எழும் ஒலி ஒவ்வொரு ஜதியில் இருந்து மாறுபடும். அதுவே நம்மை மெய்மறக்க செய்யும். அதே போல், முகத்தில் காட்டும் நவரசங்கள் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை நம் மனதில் ஆணி அடித்தார் போல் பதிய வைக்கும். அப்படிப்பட்ட நடன அசைவுகளை தான் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி நேஹா மேடையில் அரங்கேற்றிக் கொண்டு இருந்தார். விஷ்ணுவின் ஐந்து ஆயுதங்கள், ஐம்புலன்கள், நிலம் காற்று பூமி ஆகாயம் நெருப்பு என அனைத்தையும் ‘பன்சிகா’ என்ற தலைப்பில் தன் நடன அபிநயத்தால் அனைவரையும் கவர்ந்திருந்தார் பதினோறு வயது நிரம்பிய பரதக் கலைஞர் நேஹா.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது, படிப்பது எல்லாம் சென்னையில் தான். ஏழாம் வகுப்பு படிக்கிறேன். சின்ன வயசில் இருந்தே எனக்கு நடனம்ன்னா ரொம்ப பிடிக்கும். அப்ப ஐந்து வயசு இருக்கும், டி.வி யில் பாட்டு வந்திடக்கூடாது. அதில் ஃபாஸ்ட் பீட் பாடல்கள் வந்தா போதும், நான் அதைப் பார்த்து டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவேன். அதுவும் குத்து பாட்டுன்னா எனக்கு குஷிதான். எப்போது டி.வி ஆன் செய்து பாட்டு வந்தா போதும் என்னுடைய நடன நிகழ்ச்சி டி.வி முன் அரங்கேற ஆரம்பிச்சிடும். அம்மா, அப்பாவும் நான் டான்ஸ் ஆடுவதை பார்த்து ரசிப்பாங்க. ஒரு நாள் நான் ஆடுவதை பார்த்து அப்பா எனக்கு இயல்பாகவே நடன அசைவுகள் நன்றாக இருப்பதை புரிந்து கொண்டார்.

இப்படி ஏதோ ஒரு பாட்டுக்கு சும்மா நடனம் ஆடுவதற்கு பதில் நம் பாரம்பரிய நடனத்தை முழுமையா கற்றுக் கொள்ளலாமேன்னு அப்பாவுக்கு எண்ணம் ஏற்பட்டது. நானோ சின்ன பொண்ணு. என்னிடம் டான்ஸ் கத்துக்கிறியான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்ல... அப்பா அன்று முதல் எனக்கான குருவை தேட ஆரம்பித்தார்’’ என்றவர் தனக்கு கிடைத்த குருவை பற்றி பேசத் துவங்கினார். ‘‘என் குருவின் பெயர் லட்சுமி ராமசாமி. அவங்க பரதத்தில் டாக்டரேட் பட்டம் பெற்று இருக்காங்க. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடன ஆசிரியரா வேலைப் பார்க்கிறாங்க. ஸ்ரீ முத்ராலயா என்ற நடன பள்ளியும் நிர்வகித்து வராங்க. அப்பா பலரிடம் விசாரித்த போது, எல்லாரும் இவங்கள தான் சொன்னாங்க.

அது மட்டும் இல்லை எங்க வீட்டு பக்கத்திலேயே இந்த நடனப் பள்ளி என்பதால் எனக்கு வசதியா இருந்தது. குருவை பத்தி சொல்லணும்ன்னா அவங்க ரொம்ப ஸ்வீட். கலைமாமணி விருது பெற்று இருக்காங்க. அவங்க எவ்வளவு ஸ்வீட்டோ அவ்வளவு ஸ்ட்ரிக்டும் கூட. கிளாசுக்கு லீவ் போட்டா பிடிக்காது. எல்லா விஷயத்தையும் ரொம்ப பிராக்டிக்கலா அணுகுவாங்க. நாம் பிராக்டீஸ் செய்யும் போது சின்னச் சின்ன கரெக்‌ஷன் சொல்லுவாங்க. அதுவே நம்முடைய நடனத்திற்கு பெரிய மாற்றத்தை கொடுக்கும். அதே சமயம் டிசிப்பிளினா இருக்கணும்னு சொல்லுவாங்க. நடனம் மட்டும் இல்லாமல் வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்களை அவங்களிடம் கத்துக்கலாம். ஒவ்வொரு ஸ்டூடண்டுக்கு ஃபிரண்ட், டீச்சர், மதர் என எல்லாமுமா இருப்பாங்க’’ என்றவர் தன் முதல் நாள் அனுபவத்தை பகிர்ந்தார்.

‘‘அப்ப எனக்கு ஏழு வயசு இருக்கும். முதல் முதலா அப்பா எனக்கு பரத பள்ளியில் சேர்ப்பதற்கு அழைத்துச் சென்றார். என்னை பார்த்ததும், என் குரு சொன்ன இரண்டு கண்டிஷன் கிளாசுக்கு லீவ் போடக்கூடாது, மற்ற மாணவர்கள் நிகழ்ச்சிக்கு கண்டிப்பா வரணும். அப்பறம் நடனம் கத்துக்கிட்டா கை, கால் வலிக்கும் பரவாயில்லையான்னு கேட்டாங்க. நானும் சரின்னு தலையாட்ட... அன்று முதல் அவரின் மாணவியானேன். எங்க நடன பள்ளி ஆரம்பிச்சு 25 வருஷமாச்சு. இந்த மாசம் ஆண்டு விழா கொண்டாட இருக்கிறோம். இந்த நேரத்தில் என்னுடைய அரங்கேற்ற நிகழ்ச்சி நிறைவு பெற்றது குறித்து ரொம்பவே சந்தோஷமா இருக்கு’’ என்ற நேஹா பரதம் குறித்து சிறப்பு தேர்வு ஒன்றை எழுதி வருகிறார்.

‘‘பிரயத்னம், கலைக்கான தேர்வு. பரதம் மட்டும் இல்லை... எல்லா விதமான நடனங்கள் பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மொத்தம் ஆறு லெவல் இருக்கு. நான் மூணு முடிச்சிட்டேன். இந்த தேர்வினை பத்து வயதிற்கு மேல் உள்ளவங்க தான் எழுத முடியும். இதில் தியரி, பிராக்டிகல் மற்றும் வைவான்னு எல்லாமே இருக்கும். எல்லாவற்றிலும் தேர்ச்சி பெறணும். நாம நினைப்பது போல் அவ்வளவு சுலபமா இருக்காது. நடனம் பற்றி மட்டும் இல்லாமல் நடனம் சார்ந்த பாடல்கள் பற்றியும் தெரிந்திருக்கணும்.

காரணம், நடனத்திற்கு பாட்டு மிகவும் அவசியம். அந்த வரிகள் புரிஞ்சா தான், சரியான அபிநயம் பிடிக்க முடியும். இதில் ஒரு தேர்வு பாடல்கள் பற்றி இருக்கும். அதாவது நாம் ஒரு பாடலை தேர்வு செய்யணும். அந்த பாடல் குறித்த கேள்விகளை தேர்வில் கேட்பாங்க. பாடலை பாட தெரியணும், இல்லைன்னா அதற்கான அர்த்தம் கண்டிப்பா தெரிந்து இருக்கணும். மேலும் நாம தனியாக ஒரு பாடலை அமைக்கும் போது, அதன் அர்த்தம் தெரியலைன்னா சரியான அபிநயமோ முக பாவங்களோ கொடுக்க முடியாது’’ என்று சொன்னவர் நடனம் பயின்ற ஒரு வருட காலத்திலேயே பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.

‘‘எங்க நடனப்பள்ளியில் அவ்வப்போது ஏதாவது ஒரு நடன நிகழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். அதில் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஒரு நடனம் ஆடவேண்டும். எனக்கும் அதற்கான வாய்ப்பு கிடைச்சது. நான் செய்த முதல் நடன நிகழ்ச்சி சுந்தரகாண்டம் தான். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கண்டிப்பா சுந்தரகாண்டம் இருக்கும். அதில் எனக்கும் ஒரு கதாபாத்திரம் கண்டிப்பா இருக்கும். நான் சேர்ந்த நாள் முதல் இன்று வரை சுந்தரகாண்டத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடனமாடி வருகிறேன்’’ என்று கூறியவர் தன் அரங்கேற்ற நிகழ்ச்சி பற்றி விளக்கம் அளித்தார்.
‘‘என்னோட அரங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

நடனத்தின் கான்செப்ட் ‘பன்சிகா’, ஐந்து என்று பொருள். விஷ்ணுவின் ஐந்து ஆயுதங்கள், ஐம்புலன்கள், நிலம், காற்று, பூமி, ஆகாயம், நெருப்பு இது போன்ற ஐந்து விஷயங்களை குறிப்பதுதான் பன்சிகா. அதை நான் என் நடனம் மூலம் வெளிப்படுத்தினேன். மேலும் குறவஞ்சியை எடுத்து அதில் குறத்தி வேடத்தில் இயற்கை வளம் கொண்ட ஐந்து நிலப்பரப்பில் அவர்களின் வாழ்க்கை முறையினை சித்தரிக்கும் விதம் நடனமாடினேன். கடைசியில் தில்லானா கொண்டு முடித்தேன். இப்ப அரங்கேற்றம் முடிச்சாச்சுன்னு அப்படியே இருந்திட முடியாது. இனிமேல் தான் நான் நிறைய நிகழ்ச்சியில் பங்கு பெறவேண்டும். அடுத்து நானும் என் தோழியும் இணைந்து ஒரு நிகழ்ச்சி செய்ய இருக்கிறோம்.

அதன் பிறகு என் நடனப்பள்ளி மூலமாக வரும் எல்லா மேடை நிகழ்ச்சியிலும் பங்கு பெறணும். நடனம் சார்ந்த போட்டிகளில் பங்கு பெற்று பரிசு பெறணும். இப்படி நடனத்தில் நிறைய சாதிக்கணும். அப்புறம் யோகாவிலும் சிறப்பு பயிற்சி எடுக்கணும். படிப்பை பொறுத்தவரை ஒரு நல்ல ஃபேஷன் டிசைனரா வரணும். என்னதான் படிப்பு, வேலைன்னு போனாலும், நடனத்தை நான் என்றுமே விடுவதாக இல்லை. எனக்கான பெரிய ஸ்ட்ரஸ் பஸ்டரே நடனமாடுவது தான்’’ என்ற நேஹாவிற்கு பாரம்பரியம் மாறாமல் பரதத்துடன், மார்டர்ன் நடனத்தையும் இணைத்து ஒரு புது நடன காவியத்தை படைக்க வேண்டுமாம்.

தொகுப்பு: ஷம்ரிதி

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!