கடற்படை அகாடமி தேர்வையும் எழுதலாம் என்டிஏ தேர்வில் இந்தாண்டே பெண்கள் பங்கேற்க அழைப்பு: அக்டோபர் 8 கடைசி நாள்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். பெண்கள் கலந்து கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருந்தது.  இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவு தேர்வில் பெண்களும் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும். இந்தாண்டே வரும் நவம்பரில் நடைபெறும் நுழைவுத் தேர்விலேயே பெண்களை அனுமதிக்க  வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை  ஒன்றிய அரசு செய்ய வேண்டும்,’ என்று திட்டவட்டமாக உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, நவம்பரில் நடக்க உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க, திருமணமாகாத மற்றும் தகுதியுள்ள பெண்களிடம் இருந்து யுபிஎஸ்சி எனப்படும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

அது நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, வரும் நவம்பரில் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு திருமணமாகாத  மற்றும் வயது, கல்வி தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>