போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் விமானப் படைக்கு 56 புதிய விமானம்: முதல் முறையாக தனியார் நிறுவனம் தயாரிப்பு

புதுடெல்லி: இந்திய விமானப்படையின் போக்குவரத்துக்காக 56 விமானங்களை ரூ.20 ஆயிரம் கோடியில் வாங்க ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய விமானப்படையில் போக்குவரத்து பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அவ்ரோ-748 விமானங்களுக்கு பதிலாக நவீன சி-295 போக்குவரத்து விமானங்களை வாங்க பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து, ஸ்பெயினின் ஏர்பஸ் டிபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடியில் 56 சி-295 விமானங்களை வாங்க இந்திய விமானப்படை நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதில், முதல் 16 விமானங்கள் பறக்கும் நிலையில் வாங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். இப்பணியை ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் டாடா நிறுவனம் மேற்கொள்ளும். இதன் மூலம், இந்தியாவில் விமானப்படைக்கான விமானங்களை முழுக்க முழுக்க  தனியார் நிறுவனமே தயாரித்து, சோதித்து, பராமரித்து வழங்கப்பட இருப்பது இதுவே முதல் முறை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டிற்கு 15,000 திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: