உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: பெருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதை, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அமல்படுத்தும்படி சென்னை உயர் நீதிம்னறம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஒன்றிய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுதும் ஒரே மாதிரியான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மாதிரியான இடஒதுக்கீட்டை பின்பற்ற முடியாது.

அதனால் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கக் கூடியதுதான். அதே நேரம், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. அதனால், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது,’ என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து ஒன்றிய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதில், ‘இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறியுள்ளது.

எனவே, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், உச்ச நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்று அது பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,’ என நீதிபதிகள் தெரிவித்தனர். இதேபோல், உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மருத்துவ மேற்படிப்பிலும் பின்பற்றும்படி தேசிய தேர்வுகள் முகமை உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

Related Stories:

>