சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து 8 லேப்டாப், 1.2 லட்சம் திருடிய சிறுவன் உட்பட 8 பேர் சிக்கினர்: பெங்களூரு விடுதியில் சுற்றிவளைப்பு

அண்ணாநகர்: சென்னையில் கார்களின் கண்ணாடியை உடைத்து 8 லேப்டாப், 1.2 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு, பெங்களூருவில் உள்ள விடுதியில் பதுங்கி இருந்த சிறுவன் உட்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னை அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் கடந்த 21ம் தேதி சாலையோரம் நிறுத்தப்பட்ட 3 கார்களின் கண்ணாடியை உடைத்து 8 லேப்டாப்கள் மற்றும் 1.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அண்ணாநகர், திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், கொள்ளையர்கள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருமங்கலம்  குற்றப்பிரிவு ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் அண்ணாநகர் ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பெங்களூரு சென்று, தனியார் விடுதியில் தங்கியிருந்த 8 பேரை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள், திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரை சேர்ந்த சுப்பிரமணி (48), ரோகன் (24), டினு ஆனந்த் (25), தினேஷ் குமார் (25), தீனதயாளன் (22), கிரண்குமார் (23), ராஜாராம் (29) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. மேலும், சிறியவகை இரும்பு குண்டுகளை ரப்பர் பேண்டில் சுற்றி, கார் கண்ணாடிகளை சத்தமின்றி உடைத்து, திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 8 லேப்டாப்கள் மற்றும் 1.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் வேறு ஏதாவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>