அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதல்முறையாக சந்திப்பு ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு: இருதரப்பு உறவு குறித்து விரிவான ஆலோசனை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து பேசினார். வெள்ளை  மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவுகள், கொரோனா நிலவரம், சீனா, பாகிஸ்தான் எல்லை, ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.குவாட் மற்றும் ஐநா மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி, கடந்த புதன்கிழமை 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். தனது பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம், அமெரிக்காவின் பிரபல பன்னாட்டு நிறுவன அதிபர்களை சந்தித்து பேசினார். மேலும், ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் முதல் முறையாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியா வருமாறு கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பிரதமர் மோடி முடிவெடுத்திருப்பது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்தியா, அமெரிக்காவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் தீவிரவாதத்தை ஒடுக்கும்படி பாகிஸ்தானை கமலா எச்சரித்தார்.இதையடுத்து, பயணத்தின் முக்கிய நிகழ்வான பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு நேற்றிரவு நிகழ்ந்தது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இதுவரை தொலைபேசி வாயிலாகவும், வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் மட்டுமே அவருடன் மோடி பேசி உள்ளார். இரு தலைவர்களும் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசுவதால், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான இந்திய வம்சாவளிகள் குவிந்திருந்தனர். பாரத நாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய முறையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு வந்தார்.

அங்குள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் பைடன் - மோடி சந்திப்பு நடந்தது. இதில் இரு தரப்பு உறவு, வர்த்தகம் குறித்து பேசிய இரு தலைவர்களும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சர்வதேச பிரச்னைகள், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது.அப்போது பைடன், ‘‘இந்தியா, அமெரிக்கா உறவில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. இங்குள்ள இந்தியர்கள் அமெரிக்காவை பலப்படுத்தி உள்ளனர். இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளேன். இந்தியாவும், அமெரிக்காவும் பழமையான ஜனநாயக நாடுகளாகும். நம் முன் உள்ள கொரோனா உள்ளிட்ட சவால்களும் ஒரே மாதிரியானவை. அவற்றுக்கு நாம் இணைந்து தீர்வு காண்போம். மகாத்மா காந்தி போதித்த அகிம்சையை இன்றைய உலகில் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,’’ என்றார்.

பிரதமர் மோடி பேசுகையில், ‘‘காந்தியடிகளின் கொள்கைப்படி, வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள காலகட்டம் இது. அமெரிக்காவின் தலைமை, உலகின் அடுத்த பத்தாண்டுகளை வடிவமைக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் ஜனநாயக மதிப்புகளை கொண்டுள்ளன. இன்றைய உலகில் தொழில்நுட்பம் மிக முக்கிய சக்தியாக திகழ்கிறது. அத்தகைய தொழில்நுட்பம் மனித நேயத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும். இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் வர்த்தகம் மிக முக்கிய பங்காற்றும்,’’ என்றார்.பைடனுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் அடங்கிய குவாட் மாநாடு நடந்தது. இதில் அதிபர் பைடன், பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோர் பங்கேற்று, பிராந்திய பாதுகாப்பு, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

திடீர் பயண மாற்றம்

பிரதமர் மோடி இன்று நியூயார்க்கில் நடக்க உள்ள ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இதற்காக அவரது பயண திட்டத்தில் நேற்று திடீர் மாற்றம் செய்யப்பட்டது. அதிபர் பைடனுடனான சந்திப்புக்குப் பின், இன்று அதிகாலை 5 மணிக்கு வாஷிங்டனில் இருந்து நியூயார்க் புறப்படுவதாக இருந்தது. இது மாற்றப்பட்டு, 2 மணி நேரம் முன்பாக அதிகாலை 3 மணிக்கு அவர் நியூயார்க் புறப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

Related Stories: