டெல்லியில் வக்கீல் உடையில் வந்து எதிரிகள் தாக்குதல் நீதிமன்றத்தில் பிரபல தாதா சுட்டுக்கொலை

* நீதிபதி முன்னிலையில் நடந்த பயங்கரம்

* தாக்கிய 2 பேரை போலீஸ் சுட்டு தள்ளியது

புதுடெல்லி; டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் பிரபல தாதாவை ரவுடிக்கும்பலை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொன்றனர். அவர்களை உடனடியாக போலீசார் சுட்டு வீழ்த்தினர். டெல்லியை சேர்ந்த பிரபல தாதா ஜிதேந்தர் மான் கோகி. டெல்லியில் நடந்த பல  கொலைகள், கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவனுக்கு  தொடர்பு உண்டு. 19 கொலை மற்றும் கொலை முயற்சி, 12க்கும் மேற்பட்ட  கடத்தல், கொள்ளை, கார் பறித்தல், வழிப்பறி வழக்குகள் கோகி மீது உள்ளன. கோகியை போலீசார் கடந்த ஆண்டு மார்ச்சில் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். அவனுடன்  வந்த குல்தீப் நான் என்கிற பஜ்ஜா, கபில் என்கிற கவுரவ், ரோகித் என்கிற கோய் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கோகி மீது கடந்த ஏப்ரலில் குற்றக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் டெல்லி சிறப்பு  போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கார்கார்டூமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோகி கூட்டாளி பஜ்ஜாவை போலீசார் அழைத்துச் சென்றபோது அவன் தப்பி விட்டான். இதனால், கோகியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது டெல்லி சிறப்பு காவல்படையை சேர்ந்த பதிலடி நுண்ணறிவுப்படையினரையும் காவலுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில், கோகியின் ஜாமீன் மனு நேற்று ரோகினி நீதிமன்றம் அறை எண் 207ல் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ககன்தீப்சிங்வழக்கை விசாரித்துக் கொண்டு இருந்தார். அவர் முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் கோகி ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது, கோகி சார்பில் வக்கீல் சுனில் தோமர் ஆஜர் ஆனார். நீதிமன்றத்தில் 15 முதல் 17 பேர் இருந்தனர். கோகி உள்ளே நுழைந்ததும் வக்கீல் சீருடையில் இருந்த 2 பேர் திடீரென எழுந்து நின்று, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், 10 குண்டுகள் பாய்ந்து கோகி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானான். இதனால், நீதிமன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நீதிபதி உடனே தனது அறைக்கு சென்று விட்டார்.

வக்கீல்களும், நீதிமன்ற ஊழியர்களும் தங்கள் உயிரை காப்பாற்ற அலறி அடித்தபடி ஓடினர். இந்த நேரத்தில் கோகியுடன் வந்த சிறப்பு போலீஸ் படை, துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரையும் சரமாரியகாக சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் ஒரு பெண் வக்கீலுக்கு காலில் குண்டு பாய்ந்தது. கோகி மீது தாக்குதல் நடத்தியவர்கள் தில்லு கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  தலைநகரில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வடக்கு டெல்லி போலீஸ் இணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாராக இருந்தாலும் துப்பாக்கிதான் பேசும்

டெல்லியை கலக்கிய கோகி, கொடூரமான குற்றவாளி. தனக்கு எதிராக யார் வந்தாலும், சர்வ சாதாரணமாக துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவான். கடந்த  2016ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவன், 3 மாதங்களில் போலீஸ் காவலில் இருந்து  தப்பினான். அப்போது, அவனது தலைக்கு போலீசார் 4 லட்சம் பரிசு  அறிவித்தனர். இந்நிலையில், கோகி கூட்டாளி நிரஞ்சன் என்பவனை  தேவேந்தர் பிரதான் என்பவரது மகன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சுட்டுக் கொன்றான்.  ஆத்திரம் அடைந்த கோகி, 2017 பிப்ரவரி மாதம் அலிபூரில் தேவேந்தர் பிரதானை சுட்டுக் கொன்றான். அதே ஆண்டு அக்டோபரில் கொலை வழக்கு ஒன்றில் முக்கிய சாட்சியாக இருந்த அரியானாவை சேர்ந்த பிரபல பாடகர் ஹர்ஷிதா தாகியாவையும் சுட்டுக் கொன்றான்.

கடந்த நவம்பரில் டெல்லி அரசு பள்ளி ஆசிரியர் தீபக்கை  பள்ளிக்கு வெளியேயும், ஜனவரி மாதம் பிரசாந்த் விஹார் பகுதியில் ரவி பரத்வாஜ்  என்பவரையும் கோகி கும்பல் சுட்டுக்கொன்றது. இதையடுத்து, கோகி தலைக்கு போலீசார் ₹6.5 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தனர். அதன் பின், சில நாட்களில் பிடிபட்டான்.  இந்த சூழலில் வெளியே வந்த அவன், கடந்த 2018ம் ஆண்டு தனது கூட்டாளிகளுடன்  இன்னொரு ரவுடி கும்பலை சேர்ந்த வீரேந்தர் மான் என்பவரை புராரி சாலையில் சுட்டுக் கொன்றான். இந்த  துப்பாக்கிச்சூட்டில் அந்த வழியாக நடந்து சென்ற ஒருவரும் பலியானார்.

2 ஆண்டில் 25 பேர் பலி

டெல்லியில் கோகி கும்பலுக்கும், தில்லு தாஜ்பூரியா என்ற ரவுடி கும்பலுக்கும் இடையே  தொழில் போட்டி நடந்து வருகிறது. இந்த மோதலில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: