ஆக்கிரமிப்புதாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்

சென்னை: ஆக்கிரமிப்புதாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் கோயில் செயல் அலுவலர் மீது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலின் செயல் அலுவலராக வேலுச்சாமி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் தனியார் சிலர் கட்டிடம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் வள்ளியூர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டிடம் கட்டி வந்த நபர்கள் தங்களை வாடகைதாரர்களாக சேர்க்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.7 லட்சம் வாடகை பாக்கி தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அளித்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் ரூ.1.50 லட்சம் வரை வாடகை தந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோயில் செயல் அலுவலர் வள்ளியூர் காவல் நிலையத்தில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதாக கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்த நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி செயல் அலுவலர் வேலுச்சாமி மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு புகார் அளித்தார். அதன்படி, மண்டல இணை ஆணையரின் அனுமதி இல்லாமல் கடிதம் அளித்ததாக கூறி செயல் அலுவலர் வேலுச்சாமியை சஸ்பெண்ட் செய்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>