குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாட சென்ற மகள்; சேலை கட்டி வந்த தாய்க்கு ஓட்டலில் அனுமதி மறுப்பு?.. தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்; போலீஸ் விசாரணை

புதுடெல்லி: சேலை அணிந்து வந்த காரணத்தால் பெண்ணை ஓட்டலுக்குள் நுழைய விடாமல் தடுத்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பிரபல ஓட்டலில் சேலை அணிந்து சென்றதால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் அனிதா சவுத்ரி என்பவரின் மகள் அர்யமினி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘செப். 19ம் தேதி என்னுடைய பிறந்த நாள் என்பதால் டெல்லி அன்சல் பிளாசாவில் உள்ள அகுயிலா ரெஸ்டாரண்டில் மாலை நேரத்துக்கு டேபிள் ஒன்றை ரிசர்வ் செய்திருந்தேன்.

மாலை 5.30 முதல் 6 மணிக்குள் நான் ஓட்டலுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் குடும்பத்துடன் தாமதமாக 6.30 மணிக்கு தான் அங்கு சென்றோம். ஆனால் பிரச்னை அதுவல்ல; கேட்டில் காவலுக்கு நின்றிருந்தவர் என்னுடைய பெற்றோரை மேலும் கீழும் பார்த்து டேபிள் எதுவும் புக் செய்துள்ளீர்களா? என கேட்டார். நானும் டேபிள் புக் செய்ததற்காக மெசேஜை அவரிடம் காண்பித்தேன். ஆனால் நேரம் கடந்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். நான் காத்திருப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்றேன்.

மற்றொரு ஊழியரிடம் சென்ற அவர் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து என்னிடம் வந்து தனியாக வருமாறு அழைத்து, ‘உங்கள் தாயார் சேலை அணிந்திருப்பதால் உங்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது’ என்று கூறினார். அதன்பின், என்னால் ஓட்டலில் இருந்து வெளியேற முடியாது என்றேன். அதற்கு அவர்கள் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்; ஆனால் உங்களை அனுமதிக்க மாட்டோம் என்றனர். ஒருசில நிமிடங்கள் கழித்து மற்றொரு ஊழியர் எங்களிடம் மன்னிப்பு கேட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

அப்போது கூட இதுபோன்ற இடத்தில் என்னால் சாப்பிட முடியாது என மறுக்கவே செய்தேன். ஆனால் அந்த ரெஸ்டாரண்டின் டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக கூறியிருக்கின்றனர். இது முற்றிலும் பொய்’ என்று பதிவிட்டுள்ளார். அதேநேரம், அகுயிலா ரெஸ்டாரண்ட் சார்பில் கூறப்பட்டுள்ள விளக்கத்தில் அர்யமினி தங்கள் ஊழியரை அடித்ததாக கூறியுள்ளனர். சேலை கட்டி வந்ததால் ஓட்டல் நிர்வாகம் அனுமதி மறுத்ததற்கு பல்வேறு பெண் பிரபலங்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

சில பிரபலங்கள் சேலை அணிந்த தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சில அமைப்பினர், ஓட்டல் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, டெல்லி போலீஸ் கமிஷனருக்கு, இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், ஓட்டல் நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். வரும் 28ம் தேதி விசாரணைக்கு ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு உணவகத்தின் இயக்குனருக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சேலை விவகாரம், சமூக வலைத்தளத்தில் பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: