சென்னை சுற்றுலா பயணிகளை நள்ளிரவு வெளியேற்றிய அதிகாரி கைது

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகராக பணியாற்றி வருபவர் ஜெயச்சந்திரன். அவரது கட்டுப்பாட்டில் உள்ள சிறுகுன்றா வனத்துறை மாளிகையில், வால்பாறை நீதிமன்ற தலைமை எழுத்தர், சென்னை நீதித்துறையை சார்ந்த சுற்றுலா பயணிகளை உயரதிகாரிகள் அனுமதியின் பேரில் 2 நாட்களுக்கு முன்பு தங்க வைத்தார். இந்த நிலையில் அந்த மாளிகைக்கு இரவு நேரத்தில் ஆய்விற்காக வனச்சரகர் ஜெயச்சந்திரன் சென்றார். அப்போது அவருக்கும், நீதித்துறை சார்ந்த சுற்றுலாப்பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களை வனச்சரகர் ஜெயச்சந்திரன் தங்கும் மாளிகையில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள் வால்பாறை டவுனில் தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இந்நிலையில் வால்பாறை நீதிமன்ற தலைமை எழுத்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வனச்சரகர் ஜெயச்சந்திரன் மீது மதுபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வால்பாறை போலீசார் வழக்குப்பதிந்தனர். பின்னர் ஜெயச்சந்திரனை நேற்று கைது செய்தனர். பின்னர் வால்பாறை நீதிபதி உத்தரவின் பேரில் ஜெயச்சந்திரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

வனச்சரகர் கைது செய்தியறிந்த ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகர்கள் மற்றும் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் அட்டகட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் குவிந்தனர். போலீசார் பொய் வழக்கு போட்டு வனச்சரகரை கைது செய்துள்ளதாகவும், துறை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கலாம் என கூறியும் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>