நல்லம்பள்ளி அருகே வெட்டுக்கிளி தாக்குதல் பாளையம்புதூரில் வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு

தர்மபுரி : நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூரில் வெட்டுக்கிளி தாக்குதலையடுத்து வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூர் ஊராட்சியில் சனி சந்தை, பாளையம் புதூர் கூட்ரோடு, தண்டுகாரனஅள்ளி, பாகலஅள்ளி கிராமங்களில் சோள பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 ஏக்கருக்கு மேற்பட்ட சோள பயிரை வெட்டுகிளிகள் சேதம் ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா உத்தரவுப்படி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை கோவிந்தன், பேராசிரியர் தாம்சன், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) இளங்கோவன், நல்லம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் சோளப்பயிரை தாக்கியது வெட்டுக்கிளிகள் தான். இவை பாலைவன வெட்டுக்கிளி இல்லை. சாதாரண புல்வகை பயிரை தாக்கும் வெட்டுக்கிளி என கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு இந்த வெட்டுக்கிளியை பற்றி அச்சப்பட வேண்டாம் என்றும் இதை கட்டுப்படுத்த தேவையான அறிவுரைகளை விவசாயிகளுக்கு விளக்கினர். இந்த வெட்டுக்கிளியின் சேத அறிகுறிகள் வாழ்க்கை சுழற்சி மற்றும் கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகளுக்கு தெரிவித்தனர். அனைத்து சோளப்பயிர் பயிரிடும் விவசாயிகள் ஒருங்கிணைந்து கட்டுப்படுத்தும் முறையை பயன்படுத்த வேண்டும்.

விளக்குப்பொறி 1 எண் ஏக்கருக்கு அமைக்க வேண்டும். சோளப்பயிர் தோட்டத்தில் பறவை தாங்கிகள் ஒரு ஏக்கருக்கு 20 என்ற அளவில் அமைத்து பறவைகள் அமர்ந்து வெட்டுக்கிளியை இரையாக்கி கொன்று விடும். வேப்ப எண்ணெய் 5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் (அ) அசாடிராக்டின் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அளவில் கலந்து காலை (அ) மாலை நேரங்களில் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். கள ஆய்வில் நல்லம்பள்ளி வட்டார வேளாண்மை அலுவலர் இளங்கோவன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: