வேலூர் மேம்பாலம் அருகே கொட்டுகின்றனர் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் குப்பைகள்-மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் பழைய பாலாற்று மேம்பாலம் அருகே அதிகளவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.வேலூர் விருதம்பட்டு பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை பாலாற்றில் பழைய மேம்பாலம் உள்ளது. இந்த பாலாற்றின் மேம்பாலத்திற்கு அடியில் விருதம்பட்டு பகுதியில் உள்ள சில தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் பகுதியில் சேரும் குப்பைகள், கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டி வருகின்றனர்.

மேலும் தினந்தோறும் அப்பகுதிகளை சேர்ந்த சிலர் குப்பைகளை வாகனங்களில் எடுத்து வந்து கொட்டுவதால் அந்த பகுதி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது.இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கழிவுகள் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நிலத்தடிநீர் மாசடையும் நிலையும் உருவாகி உள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பொதுமக்கள் ஆர்வர்த்துடன் வந்து கண்டுக்களிக்க வருகின்றனர்.

ஆனால் தூர்நாற்றம் காரணமாக அங்கு நின்று கூட பார்க்க முடியாமல் ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை பாலாற்றில் கொட்டும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: