திருப்பதியில் பரபரப்பு பேராசிரியர் வீட்டின் பூட்டு உடைத்து 50 சவரன் நகை, ₹11 லட்சம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருப்பதி : திருப்பதியில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டின் பூட்டு உடைத்து ₹50 சவரன் நகை, ₹11 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ராயல் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர்களது பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், கோபால், பத்மாவதி இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோபாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறை ஏற்பட்டது. இதனால், அவர் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் பத்மாவதி, கோபாலை பார்த்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனையில் இருந்து பத்மாவதி வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு திறந்தநிலையில் பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளது. மேலும், பீரோவில் வைத்திருந்த ₹11 லட்சம், 50 சவரன் நகை திருட்டு போனது தெரிந்தது.

இதுகுறித்து, பத்மாவதி திருப்பதி எஸ்வி பல்கலைக்கழகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்படடு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிந்து வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: