தேவஸ்தான சிறப்பு அழைப்பாளர்கள் நியமனத்துக்கு தடை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்று 108 தேங்காய் உடைத்து பாஜவினர் வழிபாடு-அலிபிரி பாத மண்டலத்தில் நடத்தினர்

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு அழைப்பாளர்கள் நியமனத்துக்கு தடை உத்தரவு வழங்கிய உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று பாஜவினர் அலிபிரி பாத மண்டலத்தில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 உறுப்பினர்கள், 4 நிர்வாக குழு உறுப்பினர்கள் என 28 பேருடன் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இதுதவிர அறங்காவலர் குழுவில் 52 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிப்பதற்கு ஆந்திர மாநில அரசு 2 அரசாணைகளை வெளியிட்டு, பட்டியலும் வெளியிட்டது. தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக ஜம்போ அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் வியாபாரிகள், தொழிலதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்வதில் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிறப்பு அழைப்பாளர்கள் சிபாரிசு கடிதங்களின் பெயரில் தரிசன டிக்கெட்டுகளை வியாபாரம் செய்வதற்கே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவஸ்தானத்தின் மீது நம்பகத்தன்மை குறையும் என 3 வெவ்வேறு பொது நல வழக்குகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அழைப்பாளர்கள் நியமனம் விதிமுறைகளின்படி செய்யப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளர்கள் நியமனத்துக்கு தடை விதித்தும், சிறப்பு அழைப்பாளர்களை நியமனம் செய்வதற்கான அரசாணையை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைத்தும் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில், இந்த உத்தரவை வரவேற்று அலிபிரி பாத மண்டலத்தில் பாஜவினர் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் தலைமையில் நடந்த இந்த வழிபாட்டில் பாஜவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: