சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர்கள் திறப்பு : தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே படங்களை ரசித்த மக்கள்!!

சோமாலியா : சோமாலியா நாட்டில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டதை அந்நாட்டு மக்கள் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கொண்டாடுகின்றனர். சோமாலிய தலைநகர் மொகதீஷுவில் உள்ள பாரம்பரியமிக்க நேஷனல் தியேட்டர் கடந்த 1967ம் ஆண்டில் கட்டப்பட்டது. கடந்த 1991ல் அங்கு உள்நாட்டு போர் வெடித்த பிறகு அந்த தியேட்டர் ராணுவ தலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 2012ல் சீரமைக்கப்பட்டு மீண்டும் படங்களை திரையிட தயாரானபோது, அல்கொய்டா ஆதரவு தீவிரவாத அமைப்புகள் அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த தியேட்டரில் வெற்றிகரமாக 2 குறும்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்பட்டது. ஆப்ரிக்க நாடான சோமாலியா உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அல்கொய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகள் பொழுதுபோக்கு அம்சங்களை எதிர்த்து வருவதால் பொதுமக்கள் கூடும் இடங்களில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில் தான் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே கலை ஆர்வலர்கள் இணைந்து நேஷனல் தியேட்டரில் குறும்படங்களை திரையிட்டு வரலாற்று சாதனையை படைக்கின்றனர்.

Related Stories: