2 காவல் நிலைய எல்லைகளுக்கு இடையே வீட்டை உடைத்து 1.5 லட்சம் நகை, பணம் துணிகர கொள்ளை

* புகாரை வாங்க மறுக்கும் போலீசார்

* அலைக்கழிக்கப்படும் நெசவு தொழிலாளி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசன்தாங்கலை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (37). பட்டு நெசவுத்தொழில் செய்கிறார். கடந்த மாதம் சிவப்பிரகாஷ், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்குச் சென்றார். அப்போது, காலை மற்றும் மாலை நேரத்தில் வீட்டின் வெளியே உள்ள விளக்குகளை போடும்படி கூறி, பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் சாவியை கொடுத்துள்ளார்.இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, பக்கத்து வீட்டில் வசிப்பவர், சிவப்பிரகாஷின் வீட்டில் விளக்கு போட சென்றார். அப்போது முன்பக்க  கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, சிவப்பிரகாஷுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். மேலும், காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.அதன்பேரில் நேற்று காலை சிவப்பிரகாஷ், வீடு திரும்பியபோது, பீரோவை உடைத்து, அதில் இருந்த பிரேஸ்லெட், மோதிரம் என சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் டிஎஸ்பி முருகன், தாலுகா மற்றும் மாகறல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசில், சிவபிரகாஷ் புகார் அளித்தார்.ஆனால், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சம்பவம் நடந்த இடம் தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்டது. தங்களது எல்லையில் இல்லை. இதனால், புகார் மனுவை மாகறல் காவல் நிலையத்தில் கொடுக்கும்படி கூறி, புகாரை வாங்க மறுத்துள்ளார். பின்னர் சிவப்பிரகாஷ், மாகறல் போலீசில் புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த போலீசார், புஞ்சை அரசன்தாங்கல் எங்கள் எல்லையில் இல்லை. காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் அளியுங்கள் என கூறி புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதனால், நகை மற்றும் பணத்தை இழந்தது மட்டுமின்றி, புகாரை கொடுக்க முடியாமல் சிவபிரகாஷ், அலைக்கழிக்கப்படுகிறார்.

இதையொட்டி அவர், கடும் மன உளைச்சல் அடைந்ததாக வேதனையுடன் கூறினார்.இதுதொடர்பாக, காஞ்சிபுரம் தாலுகா, மாகறல் காவல் நிலையங்களுக்கு பொறுப்பு வகிக்கும் இண்ஸ்பெக்டர் ராஜகோபாலிடம் கேட்டபோது, மாகறல் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார். 

Related Stories: