ஊரக உள்ளாட்சி தேர்தல் அமமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி வெளியேறியது: தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

சென்னை: அமமுக கூட்டணியில் தேமுதிகவை தொடர்ந்து தற்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியும் வெளியேறியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அமமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியும் விலகியுள்ளது. மேலும் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது. இது அமமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் அளித்த ேபட்டியில், ”9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட மற்றும் ஒன்றிய வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து போட்டியிடுகிறது.

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 103 வார்டுகள், 4 பஞ்சாயத்து தலைவர்கள், 6 பஞ்சாயத்து துணை தலைவர்கள், 3 ஒன்றிய கவுன்சிலர், ஒரு ஒன்றிய துணைத் தலைவர் இடங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் கைப்பற்றினர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் மக்களுக்கு தேவையான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நேர்மையான முறையில் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, தேர்தல் அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார்.

Related Stories: