திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்த சென்னை ஆசாமி கைது: புனேவில் சுற்றிவளைத்தனர்

சென்னை: சென்னையை சேர்ந்த பிரேம்ராஜ் தேவ்ராஜ் டிகுரூஸ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம், திருமண வெப்சைட் மூலமாக புனேவில் வசிக்கும் பெண் ஒருவரை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக பேசியுள்ளார். திருமணம் செய்துகொள்ளப் போகும் நபர்தானே என்ற எண்ணத்தில் அந்த பெண் இவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த பிரேம்ராஜ் அப்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வரை வாங்கியுள்ளார். ஆனால், திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும், பிரேம்ராஜ் சென்னையில் இருந்ததால், அவரை அப்பெண் மூலமாக பிம்ப்ரிக்கு வரவழைத்தனர். பிம்ப்ரி வந்த பிரேம்ராஜை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து துணை காவல் ஆணையர் மஞ்சக் இப்பார் கூறுகையில், ‘‘கைதான பிரேம்ராஜ் திருமண வலைதளம் மூலமாக புனே, தானே, மலாடு, மும்பை, தமிழ்நாடு, சென்னை, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை தொடர்பு கொண்டு திருமண ஆசை காட்டி, கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளார்.  தன்னை ஒரு கான்ட்ராக்டர் என்றும், பில்டர் என்றும், தொழில் அதிபர் என்றும் கூறுவதுடன் அதற்கேற்றவாறு பேசி ஏமாற்றியுள்ளார். இதில், இளம்பெண்கள், விதவை பெண்கள் உள்ளிட்டோர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. பல பெண்கள் புகார் அளிக்க முன்வரவில்லை. சிலர் பல காவல் நிலையங்களில் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,’’ என்றார்.

Related Stories: