வனத்துறை முட்டுக்கட்டையால் மின்சார வசதிக்காக ஏங்கும் கிராம மக்கள்

அருமனை: அருமனை அருகே உள்ள வலிய ஏலா பகுதி கிராம மக்கள், தங்களுக்கு மின்சார வசதி வழங்க மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அருமனை அருகே கடையால் பேரூராட்சியில் வலிய ஏலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 125க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இப்பகுதியில் பெரும்பாலும் ரப்பர் பால் வடிப்பு தொழிலையே நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மின்மிகை மாநிலம், மின்சாரம் இல்லாத கிராமம் தமிழகத்தில் இல்லை  என கடந்த அதிமுக அரசு அறிவித்தும் பல வருடங்களாக இப்பகுதி மக்கள் மின்சார வசதிக்காக போராடி வருகின்றனர். எனினும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லை. தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் வந்த நிலையில், வனப்பகுதிக்கு  உட்பட்ட பகுதிகளில் இவர்கள் வசிப்பதால் இவர்களுக்கு 1992 முதல் செலுத்திக் கொண்டு இருந்த வீட்டு வரி செலுத்தும் அனுமதியும் மறுக்கப்பட்டது.

மின்சார வசதி வேண்டி பல முறை மனுக்கள் கொடுத்தும் அவையும் மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த  செல்வன்(75) என்ற முதியவர் கூறியதாவது: தெருவிளக்கின் ஒளியில் படித்து விஞ்ஞானிகளான நம் நாட்டில் , தெரு விளக்கு வசதி கூட எங்களுக்கு இல்லை. என்னுடைய தாத்தா காலத்தில் இங்கு 25 குடும்பங்கள் தான் இருந்தன. தற்போது 125 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் தாத்தா, அப்பா காலத்திலேயே மின்சார வசதிக்காக போராடுகிறோம். ஆனால் இது வரையிலும் எந்த பலனுமில்லை. 1992க்கு பிறகு வீட்டு வரி செலுத்தும் உரிமையும் மறுக்கப்பட்டது. தற்போது எனக்கு 75 வயது ஆகிறது.

எங்களுடைய சந்ததிகளுக்காவது வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்று முந்தைய தி.மு.க ஆட்சியில் சுரேஷ்ராஜன் அமைச்சராக இருந்த போது வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி முகப்பில் உள்ள 25 வீடுகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டது. மீதமுள்ள வீடுகளுக்கு மின்சார வசதி மறுக்கப்பட்டது. தற்போதும் மின்சார வசதி தர மின்சார துறைக்கு எந்த வித ஆட்சேபனையும்  இல்லை. ஆனால் அதற்கு  வனத்துறை அனுமதி தர வேண்டும். இந்த முறை தி.மு.க அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால் தங்களுடைய பிரச்னைகள் தீர்வுக்கு வர வாய்ப்புகள் உள்ளது. முறையான விசாரணை நடத்தி படித்துக் கொண்டிருக்கும் தங்களது வருங்கால சந்ததியினருக்கு அவர்களது வாழ்வில் ஒளி வீசிட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து வசதிகளுடன் மாற்று இடம்

இது குறித்து குமரி மாவட்ட வனத்துறை அதிகாரியான இளையராஜாவிடம் கேட்டபோது, வன உயிரின சரணாலயமாக அறிவிக்கபட்ட பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கவோ, மின்சார வசதிக்கு அனுமதி வழங்கவோ  வனத்துறை அதிகாரிகளுக்கு கூட உரிமை இல்லை. தற்போது சென்னை உயர் நீதிமன்றமும்  தமிழகம் முழுவதும் உள்ள வன உயிரின சரணாலய பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற ஆணை பிறப்பித்துள்ளது. வலிய ஏலா  கிராம பகுதியில் வாழும் மக்களுக்கு மாற்று இடம் கண்டுபிடித்து, வீடுகளை கட்டி கொடுத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

Related Stories: