செய்யாற்றில் திடீர் வெள்ளம்: 4 ஆண்டுகளுக்கு பிறகு தடுப்பணை நிரம்பியது

போளூர்: திருவண்ணாமலை மாவட்டத்தில் மிக பெரிய ஆறாக செய்யாறு உள்ளது. ஜவ்வாது மலையில் தோன்றி செங்கம், கலசபாக்கம், போளூர் வழியாக செய்யாறு அருகே பாலாற்றில் கலக்கிறது. மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செய்யாறு விளங்கி வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு கனமழை பெய்து செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால், அதன்பிறகு ஆற்றில் வெள்ளம் ஏற்படவில்லை. இந்நிலையில், போளூர் அடுத்த ஆனைவாடி கிராமம் அருகே செய்யாற்றின் குறுக்கே ₹7.30 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஆனால், தடுப்பணை கட்டிய பிறகு இதுவரை அங்கு தண்ணீர் தேங்கவில்லை. இந்நிலையில், ஜவ்வாது மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் அருகே உள்ள செய்யாற்றில் கலக்கிறது.

எனவே, போளூர் அருகே உள்ள ஆனைவாடி தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. செய்யாறு:  செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு பரவலான மழை பெய்தது. இதனால் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரி உட்பட பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கலசபாக்கம்: கலசபாக்கம் தாலுகாவில் நேற்று முன்தினம் 125 மி.மீ. மழை பெய்தது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனாலும், முக்கிய நீராதாரமான மேல்சோழங்குப்பம் மிருகண்டா அணையில் குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் உள்ளது. ஆனைவாடி தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் அங்கு மலர்தூவி வரவேற்றார். மேலும், தொடர் மழை காரணமாக தென்பள்ளிபட்டு ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. வீரலூர் ஊராட்சியில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி சம்பா நடவு சேதமடைந்தது.

இதனை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் நேரில் பார்வையிட்டார். அப்போது விவசாயிகள், மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்குவதால் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்.  மழைநீர் வெளியேற வசதியாக கல்வெர்ட்டு அமைத்து தர வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்.அப்போது, ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், பிடிஓ லட்சுமி, முன்னாள் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வக்கீல் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் காளியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: