பேரணாம்பட்டு அருகே தொடர் மழையால் பாலூர் தடுப்பணை நிரம்பியது

குடியாத்தம்: பேரணாம்பட்டு அருகே தொடர் மழையால் பாலூர் தடுப்பணை நிரம்பியது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 40 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், நேற்று முன்தினம் வரை 250 மில்லி மீட்டர் அளவு மழை கொட்டியது. இதேபோன்று பேரணாம்பட்டு அருகே உள்ள ஆந்திர வனப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக இரவில் விடியவிடிய கனமழை பெய்கிறது.

இதில் ரங்கம்பேட்டை கானாறு, பத்தலபள்ளி மலட்டாறு மற்றும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலூர் தடுப்பணை நிரம்பி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த ஆற்றில் பாயும் வெள்ளம், நரியம்பட்டு வழியாக பேரணாம்பட்டு அடுத்த ரெட்டிமாங்குப்பம் பகுதிக்கு சென்று பாலாற்றில் கலக்கிறது. வெள்ளம் பாய்ந்து வருவதால் அங்குள்ள 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராஜக்கல், கல்லேரி ஆகிய 2 ஏரிகளும் முழுமையாக  நிரம்பியுள்ளது. இதனால் ரெட்டிமாகுப்பம் தரைப்பாலத்தில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

இங்குள்ள தரைப்பாலத்தில் மேல்பட்டி போலீசார்  தடுப்பு வேலிகளை அமைத்து இவ்வழியாக குடியாத்தம், ஆம்பூர் செல்ல வாகனங்களுக்கு நேற்றுமுன்தினம் முதல் தடை விதித்துள்ளனர். பாலாற்றில் பாயும் வெள்ளத்தை குடியாத்தம் ஆர்டிஓ தனஞ்ஜெயன் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் வரதராஜ்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: