8 இடத்தில் இருவழிச்சாலையால் ஆண்டுக்கு 80 விபத்துகள்: 9 ஆண்டாக கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

சேலம்: சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில் 8 இடங்கள் இருவழிச்சாலையாக உள்ளன. இந்த இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சேலம்-உளுந்தூர்பேட்டை இரு வழிச்சாலையாக இருந்தது. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், இச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வந்தன. வாகன விபத்துக்களை குறைக்க நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், போக்குவரத்து ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் அமைப்பினர் ஒன்றிய அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த ஒன்றிய அரசு கடந்த 2008ம் ஆண்டு இரு வழிச்சாலையாக இருந்த சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து அதே ஆண்டில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதில் சீலநாயக்கன்பட்டியில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை 136 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்றது. இப்பணி  தொடர்ந்து 5 ஆண்டுகள் நடந்து, 2013ம் ஆண்டு நிறைவு பெற்றது. இச்சாலையில் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய எட்டு இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலைகள் அனைத்தும் அப்போதிருந்த வாகனங்களின் எண்ணிக்கையை பொறுத்து இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டது.

இச்சாலையில் மேட்டுப்பட்டி, நத்தக்கரை, மாடூர் ஆகிய 3 இடங்களில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாகியும் இன்னும் 8 இடங்கள் இரு வழிச்சாலையாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது. விபத்துக்களை தவிர்க்க இரு வழிச்சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் ஒன்றிய அரசை தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த  கோரிக்கை 9ஆண்டாக கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. இது குறித்து சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையை உபயோகிக்கும் வாகன ஓட்டிகள் கூறியதாவது: சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையானது  ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், மதுரை, தர்மபுரி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களை இணைக்கும் இடமாக உள்ளது. இதனால் இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.

இரு வழிச்சாலையாக இருந்த சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு ஒன்பது ஆண்டுகளாகிறது. இச்சாலையில் 8 இடங்களில் புறவழிச்சாலைகள் உள்ளன.4 வழிச்சாலையாக மாற்றும்போது, இந்த புறவழிச்சாலைகளில் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடங்களில் சிறு நீரோடை பாலங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை இதனை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்க ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேலம் சீலநாயக்கன்பட்டியில் தொடங்கும் சாலை உடையாப்பட்டி பவர்ஹவுஸ் வரை 4 வழிச்சாலையாக உள்ளது. அங்கிருந்து ஏழாவது மைல் வரை இரு வழிச்சாலையாக உள்ளது. எப்போதும் 4 வழிச்சாலையில் வரும் வாகனங்கள் 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். அதே வேகத்தில் இருவழிச்சாலையில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. ஓர் ஆண்டுக்கு சராசரியாக 60 முதல் 80 விபத்துக்கள் புறவழிச்சாலையில் நடக்கிறது. இதைதவிர சிறு, சிறு விபத்துக்களும் நடந்து வருகிறது.

கேரள மாநிலத்தில் இருந்தும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் இருந்தும் தொழில் நிமித்தமாக சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையை  அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். சென்னைக்கு செல்வதற்கும் இதுவே முக்கிய சாலையாக உள்ளது. இரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலை இணையும் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சரியான மின்விளக்கு வசதி இல்லை. மேலும் சாலையில் எச்சரிக்கை விழிப்புணர்வு பலகை அதிகளவில் இல்லை. இதுபோன்ற காரணங்களால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் விபத்துக்களை தவிர்க்க  புறவழிச்சாலைகள் அனைத்தையும் 4 வழிச்சாலையாக மாற்ற ஒன்றிய அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வாகன ஓட்டிகள் கூறினர்.

Related Stories: