நூறாண்டு பழமையான கோவிலை புனரமைக்க வேண்டும் : பொதுமக்கள் வலியுறுத்தல்

தொண்டி :  தொண்டி அருகே பழமையான பெருமாள் கோவில் இடிந்து பாழடைந்துள்ளது. இக்கோவிலை புனரமைப்பு செய்து தர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தொண்டி அருகே உள்ள வட்டாணம் கிராமத்தில் நூறு வருடம் பழமை வாய்ந்த தொன்மையான லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் அமர்ந்த நிலையில் சுமார் 4 அடி உயரத்தில் உள்ள சுவாமி இடது கையில் சக்கரம் உள்ளது. மடியில் லட்சுமி தாயார் அமர்ந்து உள்ளார்.

சுற்று வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இது மிகவும் வித்தியாசமாக உள்ளது. கோவிலின் நுழைவு வாயிலில் நாகநாதரும் உட்பகுதியில் ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது. கோவிலின் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் முழுவதும் முற்றிலும் இடிந்து உள்ளது. சுவற்றில் கல்வெட்டுகளும் உள்ளது. இடிந்து முட்புதர்கள் மண்டி பாழடைந்து இருந்த இக்கோவிலை இப்பகுதி பொதுமக்கள் சுத்தம் செய்து வழிபாடு நடத்த ஏதுவாக செய்துள்ளனர்.

இருப்பினும் இக்கோவிலின் தொன்மை மற்றும் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவும், இடிந்த கோவிலை அறநிலையத் துறையினர் புதுப்பித்து தரவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒடவயல் செல்வநாயகம் கூறியது,‘சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்ததாக இங்குள்ள முதியவர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் கோவில் இடிந்து விட்டதாகவும், இதை புனரமைப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவும் கோவிலின் சுவற்றில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும். தற்போது வழிபாடு நடத்த ஏதுவாக கிராம மக்கள் சேர்ந்து ஜேசிபி இயந்திரத்தால் சுத்தம் செய்துள்ளோம்’ என்றார்.

Related Stories: