கள்ளிக்குடியில் போலீசார் வாகனச்சோதனை கள்ளநோட்டு கும்பல் சிக்கியது

* கட்டுக்கட்டாக பணம், கார்கள் பறிமுதல்

திருமங்கலம் :மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே விருதுநகர் நான்குவழிச்சாலையில் தாலூகா இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ் தலைமையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விருதுநகர் மாவட்டத்திலிருந்து வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 10 பேரில் சிலர் கள்ளிக்குடி போலீசாரின் குற்றவழக்குகளில் ஏற்கனவே தேடப்பட்டவர்கள். அதனால், அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

அதில், ஒரு காரில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 18 கட்டுகளும், 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 54 கட்டுகளும், 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 18 கட்டுகளும் இருந்தன. இவற்றில் பெருபாலானவை, ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட நோட்டுகள். போலீசார் அவர்களை கைது செய்து கள்ளிக்குடி ஸ்டேசனுக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த திருமங்கலம் டிஎஸ்பி முத்துக்குமார் விசாரணை நடத்தியதில், அவர்கள் அனைவரும் கள்ளநோட்டு கும்பல் என்பது தெரியவந்தது.

பிடிபட்ட நபர்களின் விவரங்கள் வருமாறு: கரூர் மாவட்டம் வெங்கமேடு என்எஸ்கே நகர் யோகராஜ் (38), சென்னை குன்னத்தூர் சுனில்குமார் (49), மதுரை கருப்பாயூரணி அன்பரசன் (31), கேரள மாநிலம் கோழிக்கோடு டோமிதாமஸ் (50), கோவை கருமத்துப்பட்டியை சேர்ந்த அக்பர் (60), திண்டுக்கல் நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளப்பட்டி ஹூமாயூன் (42), மதுரை கள்ளிக்குடி அருகேயுள்ள அரசபட்டியை சேர்ந்த தண்டீஸ்வரன் (33), ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த சரவணன் (37), நாமக்கல் அருகேயுள்ள பரமத்திவேலூரினை சேர்ந்த ரமேஷ் (37), வேலூர் மாவட்டம் காட்பாடியை சோ்ந்த பொன்ராஜ் (66).

தனிப்படை போலீசார் கூறுகையில், ‘‘இவர்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களுடன் கூட்டணி அமைத்து கள்ளநோட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு திடீரென பணம் தேவைப்படும் போது லோன் வாங்கி தருவதாக கூறியும், வேலை வாங்கி தருவதாக கூறியும் அட்வான்ஸ் தொகை ரூ.25 லட்சம், 30 லட்சம் என வாங்கி கொண்டு பத்திரம் முடிக்க வேண்டும் எனக் கூறி பணம் கேட்டவர்களை வர சொல்வது வழக்கம்.

 ஒரிஜனல் பணத்தை இந்த கும்பல் வைத்து கொண்டு கள்ளநோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு எடுத்து வருவர். பத்திரப்பதிவு முடிந்ததும் இந்த கும்பலில் சிலர் போலீசார் போல் வேடமணிந்து வருவர். அவர்களிடம் சிக்குவது போல் நடித்து பணத்துடன் தப்பி சென்று நூதன முறையில் திருடி வந்தனர்’’ என்றனர்.

Related Stories:

>