வரி செலுத்தாமல் ஏமாற்றும் நிறுவனங்களின் உரிமம் ரத்து? வணிகவரித்துறை அமைச்சர் அதிரடி பி.மூர்த்தி

மதுரை: வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்  மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி மதுரைக்கு ஐந்து முறை வந்துள்ளார். 2வது முறை மதுரை வரும் போது, மேல் நாட்டு உடையிலிருந்து சாதாரண விவசாயி உடைக்கு மாறியுள்ளார். அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளோம்.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மாவை என்றும் நினைவு கூர்வோம். மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமையும் இடத்தில், விஞ்ஞான ரீதியாக அங்கு ஏற்கனவே வளர்ந்துள்ள மரங்களை வேரோடு எடுத்து, வேறு இடத்தில் ஊன்றும் பணி நடந்து வருகிறது. ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய நூலகமாக அமையும்.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசின் நிபந்தனைகள் மாநில அரசுக்கு ஏற்றவாறு இருந்தால் பரிசீலனை செய்வோம் என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியால் ஏற்படும் இழப்புகள் குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறையில் இருக்கிறது. இச்சூழ்நிலையிலும், உள்ளாட்சித் துறையின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முதல்வர் செய்து வருகிறார். படிப்படியாக நிதி நெருக்கடிகளை சமாளித்து பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வழங்கி வருகிறார்.

பல்வேறு ஜவுளி நிறுவனங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளனர். அது வெளியே தெரியாமல் இருக்கிறது. பல நிறுவனங்கள் பொதுமக்களிடம் வாங்கும் வரியை செலுத்தாமல், அரசை ஏமாற்றுகின்றனர். ஒரு வாரத்தில் 103 இடங்களில் சோதனை நடந்தது. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களது உரிமத்தை ரத்து செய்யலாமா என ஆய்வு செய்து வருகிறோம்.

ஒரு வார காலத்தில் அதுகுறித்து விபரம் தெரிவிக்கப்படும். வரி வருவாயில் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாக தெரியும். பல பொருள்களுக்கு ஜிஎஸ்டிக்கான வரி இல்லாமல் வழங்குகிறார்கள், சில பொருள்களுக்கு வரி பெற்றுக்கொண்டு அதை செலுத்துவதில்லை. ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக பதவி ஏற்றதில் இருந்து சிறப்பாக ஆட்சி செய்கிறது. வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: