நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி சொத்துக்களை மீட்க நில அளவீடு செய்யும் பணி தீவிரம்: செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டம்

ெசன்னை: நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பல ஆயிரம் கோடி சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் வகையில் நில அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பரம்பரை அறங்காவலர் மற்றும் செயல் அலுவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இக்கோயிலுக்கு சொந்தமாக பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளது. இந்த ெசாத்துகள் பெரும்பாலும் நுங்கம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் அமைந்துள்ளன. இக்கோயில் சொத்துக்கள் சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். ஆனால், இந்த சொத்துக்கள் இன்றளவும் மீட்கப்படாமல் உள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் பல நூறு கோடி வருவாய் ஈட்டி வருகின்றனர். இவ்வாறு ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலின் சொத்து மதிப்பு மட்டும் ₹8ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்து வந்தாலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில்களின் சொத்துக்களை மீட்பதில் அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் அதிரடி காட்டி வருகின்றனர். இதையடுத்து அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் ஆக்கிரமிப்பாளரின் பிடியில் சிக்கியுள்ள சொத்துக்களை மீட்கும் வகையில், கோயில் சொத்தை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் 3 நில அளவையர், கோயில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரோவர் மூலம் கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் சொத்துக்களில் ஒரு சதுர அடி கூட விடுபடக்கூடாது என்பதற்காக துல்லியமாகவும், கவனமாகவும் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இப்பணிகள் தொடங்கிய நிலையில் இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணி முடிவடைந்தால் மட்டுமே கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான முழு விவரமும் தெரிய வரும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>